வெளிப்படுத்தின விசேஷம் 3:1-13

வெளிப்படுத்தின விசேஷம் 3:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“சர்தை பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: இறைவனுடைய ஏழு ஆவிகளையும், ஏழு நட்சத்திரங்களையும் பிடித்துக் கொண்டிருக்கிறவருடைய வார்த்தைகள் இவையே. உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன்; நீ உயிருடன் இருக்கிறாய் என்று பெயர் பெற்றிருக்கிறாய், ஆனால் நீ இறந்துவிட்டாய். விழித்தெழு! சாகும் தருவாயில், மீதியாயிருக்கிறவைகளைப் பெலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை. ஆகையால், நீ பெற்றுக் கொண்டவைகளையும், கேட்டவைகளையும் நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து, மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் திருடனைப்போல் வருவேன். நான் எந்த நேரம் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியமாட்டாய். ஆனால், தங்களுடைய உடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர், சர்தை பட்டணத்தில் இன்னும் உன்னிடம் இருக்கிறார்கள். அவர்கள் தகுதியுடையவர்களானபடியால் வெள்ளை உடை அணிந்தவர்களாய் என்னுடனே நடப்பார்கள். வெற்றி பெறுகிறவர்களுக்கு வெள்ளை உடைகள் அணிவிக்கப்படும். ஜீவப் புத்தகத்திலிருந்து ஒருபோதும் நான் அவர்களுடைய பெயரை அழித்துப்போடமாட்டேன். என்னுடைய பிதாவுக்கு முன்பாகவும், அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும், அவர்களுடைய பெயரை அறிக்கையிடுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். “பிலதெல்பியா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை வைத்திருக்கிறவரும். ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும் ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு பூட்டுகிறவருமாகியவர் சொல்லுகிற வார்த்தைகள் இவையே. நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். இதோ பார், நான் உனக்கு முன்பாக திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன். யாராலும் அதை மூடமுடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். ஆனால், நீ என்னுடைய வார்த்தையைக் காத்துக்கொண்டாய். நீ என்னுடைய பெயரை மறுதலிக்கவுமில்லை. தாங்கள் யூதர்கள் அல்லாதிருந்தும், தங்களை யூதர்கள் என்று பொய்யாய் கூறிக்கொள்ளும் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள் உன்னுடைய கால்களில் வந்து விழச்செய்து, நான் உன்னை நேசித்தேன் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன். பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படி, முழு உலகத்தின்மேலும் வரப்போகும் உபத்திரவத்திலிருந்து நானும் உன்னைக் காத்துக்கொள்வேன். நான் சீக்கிரமாய் வருகிறேன். அப்பொழுது, யாரும் உனக்குரிய கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடத்தில் உள்ள வார்த்தையைப் பற்றிப் பிடித்துக்கொள். வெற்றி பெறுகிறவர்களை என்னுடைய இறைவனின் ஆலயத்தில் ஒரு தூணாக்குவேன். அவர்கள் இனி ஒருபோதும் அதைவிட்டு நீங்கிப்போகமாட்டார்கள். நான் அவர்கள்மேல் என்னுடைய இறைவனின் பெயரையும், என்னுடைய இறைவனின் நகரத்தின் பெயரையும் எழுதுவேன். இறைவனிடத்திலிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே இறங்கி வருகிற புதிய எருசலேம் என்னும் எனது இறைவனுடைய நகரத்தின் பெயரையும், என் புதிய பெயரையும், அவர்கள்மேல் நான் எழுதுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவன் என்று பெயர்பெற்றிருந்தும் செத்தவனாக இருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, மரித்துப்போகிறதாக இருக்கிற காரியங்களைப் பெலப்படுத்து; உன் செய்கைகள் தேவனுக்குமுன்பாக நிறைவானவைகளாக நான் பார்க்கவில்லை. எனவே நீ கேட்டதையும், பெற்றுக்கொண்டதையும் நினைத்துப்பார்த்து, அதற்குக் கீழ்ப்படிந்து மனம்திரும்பு. நீ விழிப்படையாவிட்டால், திருடனைப்போல உன்னிடம் வருவேன்; நான் உன்னிடம் வரும் நேரத்தை நீ தெரியாமல் இருப்பாய். ஆனாலும் தங்களுடைய ஆடைகளை அசுத்தப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்கு உண்டு; அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதால், வெண்மையான ஆடை அணிந்து என்னோடு நடப்பார்கள். ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு வெண்மையான ஆடை அணிவிக்கப்படும்; ஜீவபுத்தகத்திலிருந்து அவனுடைய பெயரை நான் நீக்கிப்போடாமல், என் பிதாவிற்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் அவன் பெயரை அறிக்கைச் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவென்றால்: பரிசுத்தம் உள்ளவரும், சத்தியம் உள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவனும் பூட்டமுடியாதபடி திறக்கிறவரும், ஒருவனும் திறக்கமுடியாதபடி பூட்டுகிறவருமாக இருக்கிறவர் சொல்லுகிறதாவது; நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இதோ, யூதர்களாக இல்லாதிருந்தும் தங்களை யூதர்கள் என்று பொய் சொல்லுகிற சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாக இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன். இதோ, சீக்கிரமாக வருகிறேன்; யாரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடி நான் உனக்குச் சொன்னதையெல்லாம் செய்துகொண்டு இரு. ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக வைப்பேன், அதில் இருந்து அவன் எப்போதும் நீங்குவது இல்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்தில் இருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 3:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)

“சர்தை சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் கொண்டிருக்கிறவர் இவைகளை உனக்கு கூறுகிறார். “நீங்கள் செய்பவற்றை நான் அறிவேன். நீங்கள் உயிர் வாழ்வதாக மக்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் நீங்கள் செத்துப் போனவர்களே. எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன். எனவே நீங்கள் பெற்றவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் மறவாதீர்கள். அவற்றுக்கு அடிபணியுங்கள். உங்கள் மனதையும், வாழ்வையும் மாற்றுங்கள். நீங்கள் விழித்தெழுங்கள். அல்லது நான் திருடனைப்போல வந்து உங்களை ஆச்சரியப்படுத்துவேன். எப்பொழுது நான் வருவேன் என உங்களுக்குத் தெரியாது. “ஆனால் உங்கள் குழுவில் சிலர் பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னோடு நடப்பார்கள். அவர்கள் வெள்ளை ஆடைகளை அணிவார்கள். ஏனென்றால் அதற்கு அவர்கள் தகுதியானவர்கள். வெற்றிபெறுகிற ஒவ்வொருவரும் இவர்களைப்போல் வெண்ணிற ஆடைகளை அணிந்துகொள்வார்கள். நான் அவர்களது பெயர்களை ஜீவப் புத்தகத்திலிருந்து எடுத்துப்போட மாட்டேன். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள். இதனை நான் என் பிதாவின் முன்பும், தூதர்களுக்கு முன்பும் சொல்வேன்.” சபைகளுக்கு ஆவியானவர் சொல்வதை கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “உண்மையுள்ளவரும் பரிசுத்தமுள்ளவரும் இவைகளை உனக்குக் கூறுகிறார். அவர் தாவீதின் திறவுகோலை உடையவராக இருக்கின்றார். அவர் ஒரு கதவைத் திறந்தால், அதை யாராலும் மூட முடியாது. மேலும் அவர் கதவை மூடினால் யாராலும் அதைத் திறக்க முடியாது. “நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை. கவனியுங்கள். சாத்தானைச் சேர்ந்த கூட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் தம்மை யூதர்கள் எனக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொய்யர்களே! அவர்கள் உண்மையான யூதர்கள் அல்லர். அவர்களை உங்கள் முன் அடிபணிந்து வணங்கச்செய்வேன். என்னால் நேசிக்கப்படுகிற மக்கள் நீங்கள் என்பதை அவர்கள் அறிவர். எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும். “நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது. இதில் வெற்றி பெறுகிறவன் என் தேவனின் ஆலயத்தில், சிறந்த தூணாக விளங்குவான். இதில் வெற்றி பெறுகிறவனுக்காக நான் இதனைச் செய்வேன். அவன் எப்போதும் தேவனின் ஆலயத்தை விட்டு விலகமாட்டான். அவன் மேல் எனது தேவனின் பெயரை எழுதுவேன். அவன் மேல் எனது தேவனுடயை நகரத்தின் பெயரையும் எழுதுவேன். அந்த நகரத்தின் பெயர் புதிய எருசலேம். பரலோகத்திலிருக்கின்ற என் தேவனிடமிருந்து இந்நகரம் இறங்கி வந்துகொண்டிருக்கின்றது. நான் எனது புதிய பெயரையும் அவன் மீது எழுதுவேன்.” சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.