வெளிப்படுத்தின விசேஷம் 22:8-15

வெளிப்படுத்தின விசேஷம் 22:8-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான். பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.” “இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன். நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். “தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள். நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது. “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான். மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும். “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன். “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:8-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்