வெளிப்படுத்தின விசேஷம் 22:16-21
வெளிப்படுத்தின விசேஷம் 22:16-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.” ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும். இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார். இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார். இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும். கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:16-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார். ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும். இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:16-21 பரிசுத்த பைபிள் (TAERV)
“இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார். ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக. இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார். இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்! கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
வெளிப்படுத்தின விசேஷம் 22:16-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.