வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை. இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள். அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும். இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். அந்தத் இறைத்தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், சீக்கிரமாய் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிக்கும்படி, தமது தூதனை அனுப்பினார்” என்றான். “இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான். பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.” “இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன். நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். “தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள். நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள். “இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.” ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும். இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார். இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார். இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும். கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவமரம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த மரத்தின் இலைகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தகுந்தவைகள். இனி சாபமில்லை. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இரவுகள் இருக்காது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டியதில்லை; தேவனாகிய கர்த்தாவே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் எல்லாக் காலங்களிலும் அரசாளுவார்கள். பின்பு, தேவதூதன் என்னைப் பார்த்து: “இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமானவைகள், சீக்கிரமாக நடக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காட்டும்படி, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்”. “இதோ, சீக்கிரமாக வருகிறேன்; இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைபிடிக்கிறவன் பாக்கியவான்” என்றார். யோவானாகிய நானே இவைகளைப் பார்த்தும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுப் பார்த்தபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். அவர் என்னைப் பார்த்து: இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களுக்கு முத்திரை போடவேண்டாம்; காலம் நெருங்கியிருக்கிறது. “அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாக வருகிறேன்; அவனவனுடைய செய்கைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், தொடக்கமும் முடிவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். ஜீவமரத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள்வழியாக நகரத்திற்குள் செல்வதற்கும் அவருடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரர்களும், விபசாரக்காரர்களும், கொலைபாதகர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற அனைவரும் வெளியே இருப்பார்கள். இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார். ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும். இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற அனைவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாவது எடுத்துப்போட்டால், ஜீவபுத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: “உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்” என்கிறார். “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் அந்தத் தூதன் ஜீவதண்ணீர் ஓடுகின்ற ஆற்றினை எனக்குக் காட்டினான். அது பளிங்குபோன்று பிரகாசமாக இருந்தது. அது தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருந்த சிம்மாசனத்தில் இருந்து பாய்ந்தது. அது நகரத் தெருவின் நடுவில் பாய்ந்தது. அந்த ஆற்றின் ஒவ்வொரு கரையிலும் வாழ்வின் மரம் இருந்தது. அது ஆண்டுக்குப் பன்னிரண்டு முறை கனிகளைத் தருகிறது. ஒவ்வொரு மாதமும் அது கனிதருகிறது. அம்மரத்தின் இலைகள் மக்களின் நோயைக் குணமாக்கும் தன்மையுடையவை. தேவனால் குற்றம் என நியாயந்தீர்க்கப்படுகிற எதுவும் அந்நகருக்குள் இருக்காது. தேவனுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவரும் அங்கே இருப்பார்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் அவரை வழிபடுவர். அவர்கள் அவரது முகத்தைப் பார்ப்பார்கள். அவர்களின் நெற்றியில் தேவனுடைய பெயர் எழுதப்பட்டிருக்கும். அங்கு மீண்டும் இரவு வராது. அங்குள்ள மக்களுக்கு விளக்கின் ஒளியோ சூரியனின் ஒளியோ தேவைப்படாது. தேவனாகிய கர்த்தரே அவர்களுக்கு வெளிச்சம் தருவார். அவர்கள் ராஜாக்களைப் போன்று எல்லாக் காலங்களிலும் அரசாளுவர். அந்தத் தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் உண்மையானவை, நம்பத் தகுந்தவை. பரிசுத்த தீர்க்கதரிசிகளின் ஆவிகளின் தேவனாக இருக்கிற கர்த்தர் உடனடியாக என்ன நடக்க வேண்டுமென தம் ஊழியர்களுக்குக் காட்டத் தன் தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன். இந்த நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கடைப்பிடிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றான். நான் யோவான், நானே இவற்றைக் காணவும் கேட்கவும் செய்தேன். இவற்றை நான் பார்த்தும் கேட்டும் முடிந்த பின்னால், இவற்றை எனக்குக் காட்டிய அத்தூதனின் கால்களில் விழுந்து வணங்கக் குனிந்தேன். ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான். மேலும் அத்தூதன் என்னிடம், “இந்நூலில் உள்ள தீர்க்கதரிசனமான வசனங்களை இரகசியம் போல் மூடிவைக்க வேண்டாம். இவை நிகழ்வதற்குரிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும். அசுத்தமாய் இருக்கிறவன் மேலும் அசுத்தமாய் இருக்கட்டும். பரிசுத்தவான் மேலும் பரிசுத்தவானாய் இருக்கட்டும். “கவனி! நான் விரைவில் வருவேன். என்னோடு பலன்களைக் கொண்டு வருவேன். ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய செயல்களுக்கு பலன் அளிப்பேன். நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்; நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன். நானே துவக்கமும் முடிவுமாய் இருக்கிறேன். “தேவனுடைய கட்டளைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வாழ்வின் மரத்தில் உள்ள கனிகளைப் புசிப்பதற்கு உரிமை இருக்கும். அவர்கள் வாசல் வழியாக நகரத்துக்குள் நுழைய முடியும். நகரத்துக்கு வெளியே, நாய் போன்றவர்களும், சூனியக்காரர்களும், விபசாரகர்களும், கொலைகாரர்களும், உருவ வழிபாடு செய்கிறவர்களும் பொய்யை விரும்பி, அதின்படி செய்பவர்களும் இருப்பார்கள். “இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார். ஆவியானவரும் மணமகளும் “வாருங்கள்” என்கிறார்கள். இதைக் கேட்பவர்களும் “வாருங்கள்” என்று சொல்லவேண்டும். தாகமாய் இருக்கிறவன் வருவானாக. விருப்பம் உள்ளவன் ஜீவத் தண்ணீரைப் பெறுவானாக. இந்நூலில் உள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறேன். “எவனாவது ஒருவன் இவைகளோடு எதையாவது கூட்டினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற துன்பங்களை தேவன் அவன் மேல் கூட்டுவார்.” எவனாவது ஒருவன் தீர்க்கதரிசனப் புத்தக வசனங்களிலிருந்து எதையேனும் நீக்கினால் இந்நூலில் எழுதப்பட்டிருக்கிற வாழ்வின் மரத்திலிருந்தும் பரிசுத்த நகரிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் நீக்கிவிடுவார். இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்! கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

வெளிப்படுத்தின விசேஷம் 22:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்