வெளிப்படுத்தின விசேஷம் 21:6-14

வெளிப்படுத்தின விசேஷம் 21:6-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு அவர், என்னிடம் சொன்னதாவது: “அது செய்தாயிற்று. நானே அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன். நானே தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். தாகமாய் இருக்கிறவனுக்கு, வாழ்வுதரும் தண்ணீரூற்றிலிருந்து இலவசமாய் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுகிறவர்கள், இவற்றையெல்லாம் உரிமையாக்கிக்கொள்வார்கள். நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாயிருப்பார்கள். ஆனால் கோழைகள், விசுவாசம் இல்லாதவர்கள், சீர்கெட்டவர்கள், கொலைகாரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், மந்திரவித்தைகளில் ஈடுபடுவோர், சிலைகளை வணங்குவோர், சகல பொய்யர் ஆகியோரின் இடம், கந்தகம் எரிகின்ற நெருப்புக் கடலே. இதுவே இரண்டாவது மரணம்.” அப்பொழுது ஏழு கிண்ணங்களில் ஏழு கடைசி வாதைகளை நிறைத்து வைத்திருந்த, ஏழு இறைத்தூதரில் ஒருவன் என்னிடம் வந்து, “வா, நான் உனக்கு ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுகிறேன்” என்றான். அப்பொழுது, அந்த இறைத்தூதன் என்னை ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு பெரிய உயர்ந்த மலைக்குக் கொண்டுபோனான். அவன் இறைவனிடமிருந்து, பரலோகத்தைவிட்டு கீழே வந்துகொண்டிருந்த, பரிசுத்த நகரமாகிய எருசலேமை எனக்குக் காண்பித்தான். அது இறைவனுடைய மகிமையினால் பிரகாசித்தது. அது விலையுயர்ந்த மாணிக்கக்கல்லின் பிரகாசத்தைப்போலும், படிகைக் கல்லைப்போலும் பளிங்குக் கல்லைப்போலும் மின்னியது. அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரயேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த நகரத்தின் கிழக்குப் பக்கத்தில் மூன்றும், வடக்குப் பக்கத்தில் மூன்றும், தெற்குப் பக்கத்தில் மூன்றும், மேற்குப் பக்கத்தில் மூன்றுமாக, வாசல்கள் இருந்தன. அந்த நகரத்தின் மதில் பன்னிரண்டு அஸ்திபாரங்களின்மேல் கட்டப்பட்டிருந்தது. அவைகளின்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன். ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான். பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 21:6-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சிம்மாசனத்தில் இருந்தவர் என்னிடம், “இது முடிந்து விட்டது. நானே அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன். அதாவது நானே துவக்கமும் முடிவுமாக இருக்கிறேன். நான் தாகமாய் இருக்கிறவனுக்கு ஜீவ நீரூற்றிலிருந்து நீரைக் கொடுப்பேன். எவன் ஒருவன் வெற்றி பெறுகிறானோ அவனுக்கு இவை எல்லாம் கொடுக்கப்படும். அவனுக்கு நான் தேவனாகவும் அவன் எனக்கு குமாரனாகவும் இருப்பான். ஆனால் கோழைகளாக இருப்பவர்களும், நம்ப மறுப்பவர்களும், பயங்கரமான காரியங்களைச் செய்பவர்களும், கொலைகாரர்களும், பாலியல் குற்றங்கள் செய்பவர்களும், மந்திர சூன்ய வேலை செய்பவர்களும், உருவ வழிபாடு செய்பவர்களும், பொய்யர்களும் கந்தகம் எரியும் நெருப்புக் கடலுள் தள்ளப்படுவார்கள். இதுவே இரண்டாம் மரணம்” என்றார். ஏழு தேவதூதர்களுள் ஒருவன் என்னிடம் வந்தான். இவன் ஏழு இறுதி வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த தூதர்களில் ஒருவன். அத்தூதன் என்னிடம், “என்னுடன் வா. நான் ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகப்போகும் மணமகளைக் காட்டுவேன்” என்றான். அவன் ஆவியானவரால் என்னை மிகப் பெரிய உயர்ந்த மலை ஒன்றுக்கு தூக்கிச் சென்றான். அவன் எனக்கு எருசலேம் என்ற பரிசுத்தமான நகரத்தைக் காட்டினான். அது தேவனிடமிருந்து வானினின்று வெளிப்பட்டு கீழே இறங்கிக்கொண்டிருந்தது. அது தேவனுடைய மகிமையால் ஒளி வீசிக்கொண்டிருந்தது. அது விலையுயர்ந்த இரத்தினக் கல்லைப் போன்றும், பளிங்குபோல சுத்தமான வைரக் கல்லைப் போன்றும் மின்னியது. அது தன்னைச் சுற்றிலும் மிகவும் உயர்ந்த பன்னிரண்டு வாசல்களையுடைய மாபெரும் மதிலைக் கொண்டிருந்தது. அந்தப் பன்னிரண்டு வாசல்களிலும், பன்னிரண்டு தேவ தூதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு வாசலிலும் இஸ்ரவேலில் உள்ள பன்னிரண்டு குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. கிழக்கே மூன்று வாசல்களும், வடக்கே மூன்று வாசல்களும், தெற்கே மூன்று வாசல்களும், மேற்கே மூன்று வாசல்களும் இருந்தன. நகரத்தின் சுவர்கள் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அக்கற்களில் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.