வெளிப்படுத்தின விசேஷம் 2:5-9

வெளிப்படுத்தின விசேஷம் 2:5-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீ எப்பேற்பட்ட உயரத்திலிருந்து விழுந்துவிட்டாய் என்பதை நினைத்துப்பார். நீ மனந்திரும்பு. நீ ஆரம்பத்தில் செய்த செயல்களைத் திரும்பவும் செய். நீ மனந்திரும்பாவிட்டால், நான் உன்னிடத்தில் வந்து, உன்னுடைய விளக்குத்தாங்கியை அதன் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன். ஆனால் உன்னில் பாராட்டுதலுக்குரியது ஒன்று உண்டு: நிக்கொலாயரின் செயல்களை நீ வெறுக்கிறாய், அவர்களின் செயல்களை நானும் வெறுக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவர்கள் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் ஜீவ மரத்திலிருந்து பழத்தைச் சாப்பிடும் உரிமையைக் கொடுப்பேன். இந்த மரம் இறைவனுடைய சொர்க்கத்தில் இருக்கிறது. “சிமிர்னா பட்டணத்திலிருக்கிற திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: தொடக்கமும் முடிவுமாயிருக்கிற, இறந்து மீண்டும் உயிர்பெற்றவருடைய வார்த்தைகள் என்னவென்றால்: உன்னுடைய துன்பங்களையும், வறுமையையும் நான் அறிந்திருக்கிறேன் ஆனால், நீ செல்வந்தனாய் இருக்கிறாய்! தாங்கள் யூதரல்லாதவராயிருந்தும் யூதரென்று சொல்லிக்கொள்கிறவர்கள் உனக்கு விரோதமாய் அவதூறு பேசுவதையும் நான் அறிவேன். ஆனால், அவர்கள் சாத்தானின் சபையைச் சேர்ந்தவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:5-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது. சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:5-9 பரிசுத்த பைபிள் (TAERV)

எனவே விழுவதற்கு முன்பு எங்கிருந்தாய் என்பதை நினைத்துப்பார். உன் மனதை மாற்றிக்கொள். துவக்க காலத்தில் செய்தவைகளை தொடர்ந்து செய். நீ மாறாவிட்டால் நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அதனிடத்தில் இருந்து நீக்கிவிடுவேன். ஆனால் நீ செய்கிறதில் சரியானவையும் உண்டு. நான் வெறுப்பதைப்போலவே நீ நிக்கொலாய்கள் செய்வதை வெறுக்கிறாய். “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்வதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். வெற்றி பெறுகிறவனுக்கு தேவனுடைய தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியைச் சாப்பிடும் உரிமையை நான் கொடுப்பேன்.” “சிமிர்னா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “துவக்கமும், முடிவுமாயிருப்பவர் இவைகளை உனக்குக் கூறுகின்றார். அவர்தான் இறந்து, மரணத்தில் இருந்து மீண்டும் உயிருடன் எழுந்தவர். “உங்கள் துன்பங்களை நான் அறிவேன். நீங்கள் ஏழைகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையில் நீங்கள் செல்வந்தர்கள். தம்மைத் தாமே யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறவர்களால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட கெட்ட செய்திகளை நான் அறிவேன். ஆனால் உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல. அவர்கள் சாத்தானின் கூட்டத்தினர்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:5-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.