வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே: நீ வாழுகின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன். அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுடைய பட்டணத்தில், தான் கொல்லப்பட்ட நாட்களிலும், விசுவாசத்தைக் கைவிடவில்லை. அங்குதான் சாத்தான் குடியிருக்கிறான். ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள். அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கிறவர்கள் சிலரும் உன் நடுவே இருக்கிறார்கள். ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு புதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன். அந்தக் கல்லைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மாத்திரமே அந்தப் பெயரை அறிவார்கள். “தியத்தீரா பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியதாவது: கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் கண்கள் இருக்கிறவரும், துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போல் பாதங்கள் இருக்கிற இறைவனுடைய மகனின் வார்த்தைகள் இவையே: உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: தன்னுடைய போதனையினாலே என்னுடைய ஊழியர்களைத் தவறாய் வழிநடத்தி, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து, விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவைச் சாப்பிடும்படியும் செய்து தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிற யேசபேல் என்ற அந்தப் பெண்ணை நீ அனுமதிக்கிறாய். அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை. ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன். நான் அவளுடைய பிள்ளைகளை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது இருதயங்களையும், மனங்களையும் ஆராய்கிறவர் நானே என்றும், உங்கள் ஒவ்வொருவருடைய செயல்களுக்கும் ஏற்றவிதமாக, நான் உங்களுக்குப் பதில் செய்கிறவர் என்றும் எல்லா திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். அவளுடைய போதனைகளைக் கைக்கொள்ளாமல், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்கிற காரியங்களை கற்றுக்கொள்ளமல் தியத்தீரா பட்டணத்திலிருக்கிற மற்றவர்களாகிய ‘உங்களுக்கு நான் கட்டளையிடுவதாவது நான் வரும்வரை, உங்களிடமிருப்பதை பற்றிப்பிடித்துக் கொண்டவர்களாய் மாத்திரம் இருங்கள். உங்கள்மேல் இதைத்தவிர நான் வேறு எந்தப் பாரத்தையும் சுமத்தமாட்டேன்.’ வெற்றி பெறுகிறவர்களாய் முடிவுவரை என்னுடைய சித்தத்தைச் செய்கிறவர்களுக்கு நான் என் பிதாவினிடமிருந்து அதிகாரம் பெற்றதுபோலவே, நான் நாடுகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன். ‘அவர் நாடுகளை இரும்புச் செங்கோலால் ஆளுகை செய்வார். அவர்களை மண்பாண்டங்களைப்போல நொறுக்கிப்போடுவார்’ என்ற வாக்குத்தத்தத்தின்படி, நான் அவர்களுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தையும் கொடுப்பேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கட்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு. அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது. தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய். அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன். தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள். ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29 பரிசுத்த பைபிள் (TAERV)
“பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார். “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன் விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம். “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன். “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்! “ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான். “தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: தேவனின் குமாரன் இவற்றைக் கூறுகிறார். அவர் ஒருவரே அக்கினிபோல ஒளிவிடும் கண்களையும், பிரகாசமான வெண்கலம் போன்ற ஒளி தரும் பாதங்களையும் கொண்டவர். அவர் உனக்குச் சொல்வது இது தான். “நீ செய்கின்றவற்றை நான் அறிவேன். நான் உன் அன்பையும், விசுவாசத்தையும், சேவையையும், பொறுமையையும் அறிவேன். துவக்கக்காலத்தை விட இப்போது நீ அதிகமாகச் செய்வதையும் நான் அறிவேன். எனினும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உள்ளன. ஏசபேல் என்னும் பெண்ணுக்குத் தனது விருப்பம்போல வாழ நீ இடம் கொடுக்கிறாய். அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்கிறாள். அவள் தன் உபதேசத்தால் என் மக்களை என்னைவிட்டுத் தூரமாக்குகின்றாள். அவளால் அவர்கள் பாலியல் பாவங்களைச் செய்கிறார்கள். மற்றும் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்கிறார்கள். அவள் தன் மனதை மாற்றிக்கொள்ளவும், தன் பாவங்களில் இருந்து விலகவும் நான் அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவள் மாற விரும்பவில்லை. “எனவே அவளையும், அவளோடு பாவம் செய்தவர்களையும் நான் அவளுடைய படுக்கையில் எறிந்து அவர்களை மிகவும் வருந்தச் செய்வேன். அவளுடைய செய்கைகளிலிருந்து அவர்கள் மாறாவிட்டால். நான் இப்பொழுதே இதனை நிகழ்த்துவேன். அவளைப் பின்பற்றுகிறவர்களையும் நான் கொல்லுவேன். அப்பொழுது எல்லாச் சபைகளும், ‘நான் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிந்துள்ளவர்’ என்பதை அறிவார்கள். உங்களில் ஒவ்வொருவருக்கும் உங்கள் செயல்களுக்கு ஏற்றபலன் தருவேன். “ஆனால் தியத்தீராவில் உள்ள மற்றவர்கள் சிலர் அவளது போதகத்தைப் பின்பற்றவில்லை. அவர்கள் சொல்லும் சாத்தானின் ஆழமான ரகசியங்களையும் நீ அறிந்திருக்கவில்லை. எனவே உங்கள் மீது இதைத்தவிர வேறு சுமைகளை சுமத்தமாட்டேன். நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்துவாருங்கள். “இதில் இறுதிவரை இதுபோல் இருந்து வெற்றி பெறுகிறவர்களுக்கு மற்ற தேசங்களின் மேல் நான் அதிகாரத்தைக் கொடுப்பேன். அவன் அவர்களை இரும்புக் கோலால் ஆள்வான். மண்பாண்டங்களைப்போல் தூள்தூளாக அவர்களை நொறுக்குவான். “என் பிதாவிடமிருந்து இந்த வல்லமையை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்.” சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கின்ற யாவரும் கவனிக்க வேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது. தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.