வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“பெர்கமு பட்டணத்திலுள்ள திருச்சபையின் தூதனுக்கு, நீ எழுத வேண்டியதாவது: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருக்கிறவரின் வார்த்தைகள் இவையே: நீ வாழுகின்ற இடத்தை நான் அறிந்திருக்கிறேன். அங்குதான் சாத்தானின் அரியணை இருக்கிறது. ஆனால், நீ என்னுடைய பெயருக்கு உண்மையுள்ளவனாய் நிலைத்திருக்கிறாய். நீ என்னில் வைத்த விசுவாசத்தைக் கைவிட்டுவிடவில்லை. என்னுடைய உண்மையுள்ள சாட்சியாகிய அந்திப்பா உங்களுடைய பட்டணத்தில், தான் கொல்லப்பட்ட நாட்களிலும், விசுவாசத்தைக் கைவிடவில்லை. அங்குதான் சாத்தான் குடியிருக்கிறான். ஆனால், நான் உன்னில் சில குறைகளைக் காண்கிறேன்: இஸ்ரயேலரை விக்கிரகங்களுக்குப் பலியிடப்பட்ட உணவை சாப்பிடச் செய்து, அவர்களை முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடச்செய்து பாவத்திற்குள் விழசெய்த பாலாக் அரசனுக்குப் புத்தி சொன்ன பிலேயாமுடைய போதனைகளைக் கைக்கொள்கிறவர்கள் உன் நடுவே இருக்கிறார்கள். அவ்விதமாகவே, நிக்கொலாயரின் போதனையைக் கைக்கொள்கிறவர்கள் சிலரும் உன் நடுவே இருக்கிறார்கள். ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன். பரிசுத்த ஆவியானவர் திருச்சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கட்டும். வெற்றி பெறுகிறவர்களுக்கு நான் மறைக்கப்பட்ட மன்னாவைக் கொடுப்பேன். அத்துடன் நான் அவர்களுக்கு புதுப்பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பேன். அந்தக் கல்லைப் பெற்றுக்கொள்கிறவர்கள் மாத்திரமே அந்தப் பெயரை அறிவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது; உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு. அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)
“பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார். “நீ எங்கே வாழ்கிறாய் என்று எனக்குத் தெரியும். சாத்தானுடைய சிம்மாசனம் இருக்கிற இடத்தில் நீ இருக்கிறாய். ஆனால் நீ எனக்கு உண்மையானவனாக இருக்கிறாய். அந்திப்பாசின் காலத்திலும் என்மீதுள்ள உன் விசுவாசத்தை நீ மறுத்ததில்லை. அந்திப்பா எனது உண்மையுள்ள சாட்சி. அவன் உங்கள் நகரத்தில் கொல்லப்பட்டான். உங்கள் நகரம் சாத்தான் வாழுமிடம். “ஆனாலும் உனக்கு எதிரான சில காரியங்கள் என்னிடம் உண்டு. உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் பிலேயாமின் உபதேசத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிலேயாம் இஸ்ரவேலைப் பாவத்துக்கு வழி நடத்த பாலாக் என்பவனால் பலவந்தப்படுத்தப்பட்டவனாவான். இதனால் அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை உண்டு, பாலியல் பாவங்களும் செய்தனர். இதுபோலவே உங்கள் கூட்டத்தில் நிக்கொலாய் மதத்தவர்களின் போதகத்தைப் பின்பற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன். “சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்கவேண்டும்! “ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைக் கொடுப்பேன். அதோடு அவனுக்கு வெள்ளைக் கல்லையும் கொடுப்பேன். அக்கல்லில் புதிய பெயர் எழுதப்பட்டிருக்கும். ஒருவருக்கும் அந்தப் பெயர் தெரியாது. அக்கல்லை எவன் பெறுகிறானோ அவன் ஒருவனே அந்தப் புதிய பெயரை அறிந்துகொள்வான்.