வெளிப்படுத்தின விசேஷம் 19:7-11
வெளிப்படுத்தின விசேஷம் 19:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருப்போம்; அவருக்கே மகிமையைச் செலுத்துவோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டாள். அவள் உடுத்திக்கொள்ளும்படி, துலக்கமானதும், தூய்மையானதுமான மென்பட்டு அவளுக்குக் கொடுக்கப்பட்டது.” பரிசுத்தவான்களின் நீதி செயல்களையே மென்பட்டு குறிக்கின்றது. அப்பொழுது அந்த இறைத்தூதன் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எழுது!” என்றான். அவன் மேலும், “இது இறைவனுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னான். இதைக் கேட்டதும், நான் இறைத்தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அப்பொழுது அவன் என்னிடம், “நீ இப்படிச் செய்யாதே! நானும் உன்னோடும் உனது சகோதரரோடும் இயேசுவுக்கு நற்சாட்சியாய் விளங்குகிற உடன் ஊழியனே. ஆகையால், இறைவனையே ஆராதனைசெய். ஏனெனில் இயேசுவின் சாட்சியே இறைவாக்கின் ஆவியாக இருக்கிறது” என்றான். பின்பு நான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டேன். எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை இருந்தது. அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் நீதியுடன் நியாயந்தீர்த்து, யுத்தம் செய்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான். பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது. ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள். மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன. அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.” (மெல்லிய ஆடை என்பது தேவனுடைய பரிசுத்தமான மக்களின் நற்செயலைக் குறிக்கும்.) பிறகு அத்தூதன், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணநாளில் விருந்துண்ண அழைக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இதனை எழுதி வைத்துக்கொள்” என்றான். “இவை தேவனுடைய உண்மையான வார்த்தைகள்” என்றும் சொன்னான். பிறகு நான் அந்தத் தூதனை வணங்குவதற்காகக் குனிந்தேன். ஆனால் அந்தத் தூதன் என்னிடம், “என்னை வணங்கவேண்டாம். இயேசுவின் உண்மையைக் கைக்கொண்டுள்ள உன்னைப்போலவும் உன் சகோதரர்களைப் போலவும் நான் ஒரு ஊழியக்காரன். தேவனை வணங்கு. ஏனென்றால் இயேசுவின் உண்மை தீர்க்கதரிசனத்தின் ஆவியாய் இருக்கிறது” என்றான். பிறகு, நான் பரலோகம் திறப்பதைக் கண்டேன். எனக்கு முன்னால் ஒரு வெள்ளைக் குதிரை நின்றது. அதன்மீது இருந்தவர் நம்பிக்கை என்றும் உண்மையென்றும் அழைக்கப்படுகிறார். அவர் நியாயம் தீர்ப்பதிலும் போர் செய்வதிலும் மிகச் சரியாக இருக்கிறார்.