வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5

வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு நான் பார்த்தேன், அப்பொழுது அங்கே ஆட்டுக்குட்டியானவர், சீயோன் மலையின்மேல் எனக்கு முன்பாய் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 1,44,000 பேர் நின்றார்கள். அவர்களுடைய நெற்றிகளிலே ஆட்டுக்குட்டியானவரின் பெயரும், அவருடைய பிதாவின் பெயரும் எழுதப்பட்டிருந்தன. அப்பொழுது பரலோகத்திலிருந்து, நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பாய்ந்து ஓடுகிற வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலமாய் முழங்குகிற இடிமுழக்கத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. நான் கேட்ட அந்தத் தொனி, வீணை வாசிக்கிறவர்கள் தங்கள் வீணைகளை வாசிப்பதால் எழும்பிய நாதம்போல் இருந்தது. அந்தப் பெருங்கூட்டம் அரியணைக்கு முன்பாகவும், அந்த நான்கு உயிரினங்களுக்கு முன்பாகவும், சபைத்தலைவர்களுக்கு முன்பாகவும், ஒரு புதிய பாடலைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த 1,44,000 பேரைத் தவிர, வேறு எவராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள முடியாதிருந்தது. இவர்கள் தங்களைப் பெண்களால் கறைப்படுத்தாமல், தூய்மையைக் காத்துக்கொண்டவர்கள். ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும், அங்கெல்லாம் இவர்கள் அவரையே பின்பற்றுகிறார்கள். இவர்கள் மனிதரிடையே இருந்து வாங்கப்பட்டு, இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்கனியாய் ஒப்படைக்கப்பட்டவர்கள். இவர்களுடைய வாய்களில் ஒரு பொய்யும் காணப்படவில்லை; இவர்கள் குற்றம் எதுவுமே காணப்படாதவர்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடு அவருடைய பிதாவின் பெயர் தங்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேரும் நிற்பதைப் பார்த்தேன். அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம் நபர்களைத்தவிர வேறொருவரும் கற்றுக்கொள்ளமுடியாமல் இருந்தது. பெண்களால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனிதர்களில் இருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நான் பார்த்தபோது என் முன்னால் ஆட்டுக்குட்டியானவரைக் கண்டேன். அவர் சீயோன் மலைமீது நின்றுகொண்டிருந்தார். அவரோடு ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் இருந்தனர். அவர்களது நெற்றியில் ஆட்டுக்குட்டியானவரின் பெயரும் அவரது பிதாவின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது. பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியின் பெரு முழக்கத்தைப்போலவும் ஒரு சத்தம் பரலோகத்தில் ஏற்பட்டதைக் கேட்டேன். அச்சத்தம் சுரமண்டலக்காரர்களால் தம் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது. மக்கள் ஒரு புதிய பாடலைச் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் நான்கு உயிருள்ள ஜீவன்களின் முன்பாகவும் மூப்பர்களின் முன்பாகவும் பாடினர். அப்புதிய பாடலை ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டுமே கற்றுக்கொள்ள முடிந்தது. அவர்களே பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். வேறு எவராலும் அப்பாடலைக் கற்றுக்கொள்ளமுடிய வில்லை. அந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்களும் பெண்களால் தம்மை மாசுபடுத்திக்கொள்ளாதவர்கள். அவர்கள் தம்மைச் சுத்தமாய் வைத்திருந்தனர். ஆட்டுக்குட்டியானவர் எங்கெல்லாம் போகிறாரோ அங்கெல்லாம் அவர்கள் பின்தொடர்ந்து செல்கிறவர்கள். இந்த ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் மக்கள் மட்டும் பூமியில் இருந்து மீட்கப்பட்டவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டியானவருக்கும் தேவனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட முதல் மனிதர்கள். இவர்கள் பொய் சொல்லும் குற்றத்துக்கு ஆளாகாதவர்கள். இவர்கள் குற்றம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.