வெளிப்படுத்தின விசேஷம் 13:4-18
வெளிப்படுத்தின விசேஷம் 13:4-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிச்செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
வெளிப்படுத்தின விசேஷம் 13:4-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த இராட்சதப் பாம்பு மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் அந்த இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கி, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து, யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று கேட்டார்கள். அந்த மிருகத்திற்கு பெருமை பேச்சுகளையும், இறைவனை அவமதித்து பேசவும், ஒரு வாய் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரெண்டு மாதங்களுக்கு, எதையும் செய்வதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது. பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம்செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கும், அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், மக்கள்மேலும், மொழியினர்மேலும், நாட்டினர்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான ஜீவப் புத்தகத்தில், பெயர் எழுதப்படாமல் இருந்த எல்லோருமே, அந்த மிருகத்தை வணங்குவார்கள். கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். ஏனெனில், “யாராவது சிறைப்பட்டுப்போக குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சிறைப்பட்டே போவார்கள். யாராவது வாளினால் கொல்லப்பட குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வாளினால் கொல்லப்படுவார்கள்.” ஆகவே பரிசுத்தவான்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மனந்தளராமல் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொறுமையையும், விசுவாசத்தையும் அப்பொழுது காட்டவேண்டும். பின்பு பூமியிலிருந்து, இரண்டாவது மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப்போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப்போலவே பேசியது. அவ்வாறு இது அந்த முதலாவது மிருகத்தின் சார்பாக, அதனுடைய முழு அதிகாரத்தையுமே தான் பிரயோகித்தது. இது பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அந்த முதல் மிருகத்தை வணங்கும்படி செய்தது. அந்த முதலாவது மிருகமே, சாவை விளைவிக்கக்கூடிய காயமடைந்து, குணமடைந்திருந்த மிருகமாகும். இந்த இரண்டாவது மிருகம், பெரிய அற்புத அடையாளங்களைச் செய்தது. எல்லா மனிதரும் காணும்படியாக, இது வானத்திலிருந்து பூமியின்மேல் நெருப்பு வரும்படியும் செய்தது. முதலாவது மிருகத்தின் சார்பாக, அடையாளங்களைச் செய்துகாட்டும் வல்லமை இரண்டாவது மிருகத்திற்கு கொடுக்கப்பட்டதனால், அது பூமியின் மக்களை ஏமாற்றியது. வாளினால் காயமடைந்து, இன்னும் உயிருடன் இருக்கிற, அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ணுவதற்காக, அதற்கு ஒரு உருவச்சிலையைச் செய்யும்படி, இரண்டாவது மிருகம் அவர்களுக்கு உத்தரவிட்டது. முதலாவது மிருகத்தினுடைய உருவச்சிலைக்கு உயிர்கொடுக்கும் வல்லமை இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த உருவச்சிலை, பேசும் ஆற்றலுடையதாய் இருந்தது. அந்த உருவச்சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் அது கொலை செய்யும்படி அனுமதி வழங்கியது. அத்துடன், இந்த இரண்டாவது மிருகம் சிறியவர், பெரியவர், செல்வந்தர், ஏழைகள், குடியுரிமை பெற்றோர், அடிமைகள் எல்லோரையுமே தங்களுடைய வலதுகையிலோ, அல்லது தங்களுடைய நெற்றியிலோ, ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது. இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம். இதை விளங்கிக்கொள்ள ஞானம் தேவை. யாராவது அறிவு ஆற்றல் உடையவனாய் இருந்தால், அவன் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் பார்க்கட்டும். ஏனெனில், அது மனிதனுக்குரிய எண்தான்; அந்த எண் 666 ஆகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:4-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து. மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும். பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது. அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது. மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது. இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.
வெளிப்படுத்தின விசேஷம் 13:4-18 பரிசுத்த பைபிள் (TAERV)
இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர். அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள். கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக. எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ அவன் சிறைபட்டுப் போவான். எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான். இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும். பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது. அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும். புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.