வெளிப்படுத்தின விசேஷம் 1:14-20

வெளிப்படுத்தின விசேஷம் 1:14-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன். நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். “ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது. நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.”

வெளிப்படுத்தின விசேஷம் 1:14-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது; என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:14-20 பரிசுத்த பைபிள் (TAERV)

அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது. நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன. எனவே, நீ பார்த்தவற்றையெல்லாம் எழுது. இப்பொழுது நடப்பதையும், இனிமேல் நடக்கப்போவதையும் எழுது. எனது வலது கையில் உள்ள ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும் ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது. நீ கண்ட ஏழு குத்து விளக்குகளும் ஏழு சபைகளாகும். ஏழு நட்சத்திரங்களும் அந்தச் சபைகளில் உள்ள தூதர்களாகும்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:14-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். நீ கண்டவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்