வெளிப்படுத்தின விசேஷம் 1:12-18

வெளிப்படுத்தின விசேஷம் 1:12-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:12-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன். அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார். அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார். அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன். நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:12-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன். அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது; அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது. தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:12-18 பரிசுத்த பைபிள் (TAERV)

என்னோடு பேசிக்கொண்டிருந்தவர் யார் என அறிய நான் திரும்பிப் பார்த்தேன். நான் ஏழு பொன்னாலான குத்துவிளக்குகளைப் பார்த்தேன். அவற்றுக்கு மத்தியில் “மனித குமாரனைப் போன்ற” ஒருவரைக் கண்டேன். அவர் நீண்ட மேல் அங்கியை அணிந்திருந்தார். அவர் மார்பில் பொன்னால் ஆன கச்சை கட்டப்பட்டிருந்தது. அவரது தலையும், முடியும் வெண்பஞ்சைப்போலவும், பனியைப்போலவும் வெளுப்பாய் இருந்தது. அவரது கண்கள் அக்கினி சுவாலையைப் போன்றிருந்தன. அவரது பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்துகொண்டிருக்கிற ஒளிமிக்க வெண்கலம்போல் இருந்தன. அவரது சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. அவர் தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் வாயில் இருந்து இருபக்கமும் கூர்மையுள்ள வாள் வெளிப்பட்டது. அவர் முகம் உச்சி நேரத்தில் ஒளிவீசும் சூரியனைப்போல ஒளி வீசியது. நான் அவரைக் கண்டதும் இறந்தவனைப்போல அவரது பாதங்களில் விழுந்தேன். அவர் தனது வலது கையை என்மீது வைத்து, பயப்படாதே, நானே முந்தினவரும், பிந்தினவரும் ஆக இருக்கிறேன். நான் வாழ்கிற ஒருவராக இருக்கிறேன். நான் இறந்தேன். ஆனால் இப்போது சதாகாலங்களிலும் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் மரணத்துக்கும், பாதாளத்துக்கும் உரிய திறவுகோல்கள் உள்ளன.