சங்கீதம் 95:1-6
சங்கீதம் 95:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரை க் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங்கீதம் 95:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம். நன்றியுடன் அவர்முன் வருவோம்; இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம். யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; மலை உச்சிகளும் அவருக்கே உரியவை. கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின. வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; நாம் முழங்காலிடுவோம்.
சங்கீதம் 95:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
சங்கீதம் 95:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்! நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம். கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம். அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம். ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்! பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார். ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை. சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார். வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம். நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.