சங்கீதம் 91:1-10
சங்கீதம் 91:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான். நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன். நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார். யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும். நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய். இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது. உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய். “யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால், அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
சங்கீதம் 91:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் யெகோவாவை நோக்கி: நீர் என்னுடைய அடைக்கலம், என்னுடைய கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
சங்கீதம் 91:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
மிக உன்னதமான தேவனிடம் மறைந்துகொள்ள நீ போகமுடியும். சர்வ வல்லமையுள்ள தேவனிடம் பாதுகாப்பிற்காக நீ போக முடியும். நான் கர்த்தரை நோக்கி, “நீரே என் பாதுகாப்பிடம், என் கோட்டை, என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன்” என்று கூறுகிறேன். மறைவான ஆபத்துக்களிலிருந்தும் ஆபத்தான நோய்களிலிருந்தும் தேவன் உன்னைக் காப்பாற்றுகிறார். நீ தேவனைப் பாதுகாப்பிற்காக அணுகமுடியும். அவர் உன்னை ஒரு பறவை சிறகை விரித்துத் தன் குஞ்சுகளைக் காப்பதைப்போன்று காப்பார். தேவன் ஒரு கேடகத்தைப் போன்றும் சுவரைப் போன்றும் உன்னைப் பாதுகாக்கிறார். இரவில் நீ அஞ்சத்தக்கது எதுவுமில்லை. நீ பகலில் பகைவரின் அம்புக்கும் பயப்படமாட்டாய். இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய். நீ ஆயிரம் பகைவர்களைத் தோற்கடிப்பாய். உன் சொந்த வலதுகை பதினாயிரம் பகைவீரர்களைத் தோற்கடிக்கும். உன் பகைவர்கள் உன்னைத் தொடக்கூடமாட்டார்கள். சற்றுப்பார், அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்! ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய். தீயவை உனக்கு நிகழாது, உன் வீட்டில் எந்தவிதமான நோய்களும் இருப்பதில்லை.
சங்கீதம் 91:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.