சங்கீதம் 90:1-6
சங்கீதம் 90:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர். மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர். நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர். உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன. ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்: அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
சங்கீதம் 90:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். மலைகள் தோன்றுமுன்பும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். நீர் மனிதர்களைத் தூளாக்கி, மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர். உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது. அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்; தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
சங்கீதம் 90:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம். தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்! நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர், நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர். ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் கடந்த இரவைப் போலவும் இருக்கும். நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர். எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம். நாங்கள் புல்லைப் போன்றவர்கள். காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
சங்கீதம் 90:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. அவர்களை வெள்ளம்போல் வாரிக் கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம்.