சங்கீதம் 9:13-20

சங்கீதம் 9:13-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்! என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும். அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில் உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி, அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன். நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்; அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன. யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்; கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள். கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்; துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை. யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும். யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.

சங்கீதம் 9:13-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).

சங்கீதம் 9:13-20 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்: “கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும். அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும். என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.” பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள். அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர். பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர். கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார். தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர். தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள். அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள். துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும். அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும். ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை. கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும். தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும். ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

சங்கீதம் 9:13-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு, தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது. கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொண்டான். (இகாயோன், சேலா.) துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள். ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே . (சேலா).