சங்கீதம் 9:1-20

சங்கீதம் 9:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன். என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள். நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர். ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர். சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று. கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார். அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார். மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு, தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது. கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொண்டான். (இகாயோன், சேலா.) துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள். ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே . (சேலா).

சங்கீதம் 9:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன். என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்; அவர்கள் உமக்கு முன்பாக இடறிவிழுந்து அழிந்துபோகிறார்கள். நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர். நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்; அவர்களுடைய பெயரை என்றென்றுமாய் அழித்து விட்டீர். முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு, நீர் அவர்களுடைய பட்டணங்களை முற்றிலும் அழித்துப்போட்டீர்; அவை பற்றிய ஞாபகமும் ஒழிந்துபோயிற்று. யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்; நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார். அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார். ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர். உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை. சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி, அவர் செய்தவற்றை நாடுகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை; அவர் துன்புற்றவர்களின் கதறுதலை அசட்டை செய்வதில்லை. யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்! என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும். அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில் உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி, அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன். நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்; அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன. யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்; கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள். கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் பாதாளத்திற்கே திரும்புவார்கள். ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்; துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை. யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும். யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.

சங்கீதம் 9:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன். என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள். நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர். தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர். எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது. யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார். சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள். சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள். ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு, தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன. யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும் தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).

சங்கீதம் 9:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)

என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன். நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர். உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன். என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள். நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர். கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர். எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர். பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர். உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர். பகைவன் ஒழிக்கப்பட்டான்! கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன. அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை. ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார். கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார். உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார். உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார். எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார். பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர். அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர். கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும். உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர். சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள். கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள். உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார். அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர். கர்த்தர் அவர்களை மறக்கவில்லை. நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்: “கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள். ‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும். அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும். என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.” பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள். அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர். பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர். கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார். தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர். தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள். அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள். துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும். அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும். ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை. கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும். தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும். ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

சங்கீதம் 9:1-20

சங்கீதம் 9:1-20 TAOVBSIசங்கீதம் 9:1-20 TAOVBSIசங்கீதம் 9:1-20 TAOVBSI