சங்கீதம் 86:1-17

சங்கீதம் 86:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன். நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். நீரே என் இறைவன்; என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன். யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர். யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர். யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது. யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள். நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; நீர் ஒருவரே இறைவன். யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; நீர் என்னை ஆழங்களிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர். இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், அவர்கள் உம்மை மதிக்காதவர்கள். ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர். என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; என்னைக் காப்பாற்றும், ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன். என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.

சங்கீதம் 86:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர். யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள். தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும். யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதம் 86:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன். கர்த்தாவே, தயவாய் எனக்குச் செவிகொடுத்து என் ஜெபத்திற்குப் பதில் தாரும். கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன். தயவாய் என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்! நான் உமது பணியாள். நீரே என் தேவன். நான் உம்மை நம்புகிறேன். எனவே என்னைக் காப்பாற்றும். என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும். நாள் முழுவதும் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன். என்னை மகிழ்ச்சியாக்கும். நான் உமது பணியாள். ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர். உமது ஜனங்கள் உதவிக்காக உம்மைக் கூப்பிடுவார்கள். நீர் உண்மையாகவே அந்த ஜனங்களை நேசிக்கிறீர். கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும். இரக்கத்திற்கான ஜெபத்திற்குச் செவிகொடும். கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நீர் பதிலளிப்பீர் என்பதை நான் அறிவேன். தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை. நீர் செய்தவற்றை வேறெவரும் செய்ய முடியாது. ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர். அவர்கள் எல்லோரும் வந்து உம்மை தொழுதுகொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லோரும் உமது நாமத்தை பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். தேவனே, நீர் மேன்மையானவர்! நீர் அற்புதமான காரியங்களைச் செய்கிறீர். நீரே, நீர் மட்டுமே தேவன்! கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும். நான் வாழ்ந்து உமது சத்தியங்களுக்குக் கீழ்ப்படிவேன். உமது நாமத்தைத் தொழுது கொள்வதையே என் வாழ்க்கையின் மிக முக்கியமான காரியமாகக்கொள்ள எனக்கு உதவும். என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன். உமது நாமத்தை என்றென்றும் துதிப்பேன். தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர். கீழே மரணத்தின் இடத்திலிருந்து என்னைக் காப்பாற்றும். தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள். கொடிய மனிதர்களின் கூட்டம் என்னைக் கொல்லமுயல்கிறது. அம்மனிதர்கள் உம்மை மதிப்பதில்லை. ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன். நீர் பொறுமையுடையவர், உண்மையும் அன்பும் நிறைந்தவர். தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும். நான் உமது பணியாள். எனக்குப் பெலனைத் தாரும். நான் உமது பணியாள். என்னைக் காப்பாற்றும். தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும். என் பகைவர்கள் அந்த அடையாளத்தைக் கண்டு, ஏமாற்றம்கொள்வார்கள். நீர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவுவீர் என்பதை அது காட்டும்.

சங்கீதம் 86:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன். என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும். கர்த்தாவே, நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.