சங்கீதம் 83:1-18

சங்கீதம் 83:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; செவிகொடாமல் இருக்கவேண்டாம்; இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம். பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள். அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். “அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள். அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள். அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர், கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள். லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது. இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் அவர்களுக்கும் செய்யும். அவர்கள் எந்தோரில் அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே. அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும். “அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” என்று சொன்னார்களே. என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும். காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும், அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும். யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும். அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக. யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.

சங்கீதம் 83:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம். இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள். உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள். அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள். இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும், கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும், ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா) மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு, நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும். யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி, அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.

சங்கீதம் 83:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனே, அமைதியாய் இராதேயும்! உமது செவிகளை மூடிக்கொள்ளாதேயும்! தேவனே தயவாய் எதையாவது பேசும். தேவனே, உமது பகைவர்கள் உமக்கெதிராகத் திட்டங்கள் வகுக்கிறார்கள். உமது பகைவர்கள் உடனே தாக்குதல் ஆரம்பிக்கக்கூடும். உமது ஜனங்களுக்கு எதிராக அவர்கள் இரகசிய திட்டஙகளை வகுக்கிறார்கள். நீர் நேசிக்கும் ஜனங்களுக்கு எதிராக உமது பகைவர்கள் திட்டங்களை கலந்து ஆலோசிக்கிறார்கள். பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.” தேவனே, அந்த ஜனங்கள் எல்லோரும் உமக்கும் நீர் எங்களோடு செய்த உமது உடன்படிக்கைக்கும் எதிராகப் போராட ஒருமித்துக் கூடினார்கள். அப்பகைவர்கள் எங்களை எதிர்க்க ஒருமித்துச் சேர்ந்தார்கள். இஸ்மவேலராகிய ஏதோமியரும், மோவாபியரும், ஆகாரின் சந்ததியினரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தரும், தீருவில் வசிக்கும் ஜனங்களும், ஆகிய எல்லோரும் எங்களை எதிர்க்க ஒருமித்துக் கூடினார்கள். அசீரியரும்கூட அந்த ஜனங்களோடு சேர்ந்தார்கள். லோத்தின் சந்ததியினர் மிகுந்த வல்லமை பெறும்படிச் செய்தார்கள். தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும். நீர் அவர்களை எந்தோரில் தோற்கடித்தீர். அவர்கள் சரீரங்கள் நிலத்தில் விழுந்து அழிந்தன. தேவனே, பகைவனின் தலைவர்களைத் தோற்கடியும். ஓரேபுக்கும் சேபுக்கும் செய்தபடியே செய்யும். சேபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்தபடியே செய்யும். தேவனே, அந்த ஜனங்கள் உமது தேசத்தை விட்டுப் போகும்படியாக எங்களை வற்புறுத்த விரும்பினார்கள்! தேவனே, அந்த ஜனங்களைக் காற்றில் பறக்கும் பதராகப் பண்ணும். காற்றுப் பறக்கடிக்கும் புல்லைப்போல் அந்த ஜனங்களைச் சிதறடியும். நெருப்பு காட்டை அழிப்பதைப்போலவும் பெருநெருப்பு மலைகளைச் சுடுவது போலவும் பகைவனை அழித்துப்போடும். தேவனே, புயலில் அலைக்கழிக்கப்படும் துகளைப்போல அந்த ஜனங்களை துரத்திவிடும். அவர்களை அசையும், அவர்களைப் பெருங்காற்றைப்போல நின்று பறக்கடியும். தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும். அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்! தேவனே, அந்த ஜனங்களை அச்சுறுத்தி, அவர்கள் என்றென்றும் வெட்கமடையச் செய்யும். அவர்களை இழிவுப்படுத்தி, அழித்துப்போடும். அப்போது நீரே தேவனென்று அவர்கள் அறிவார்கள். உமது நாமம் யேகோவா என்பதையும் அவர்கள் அறிவார்கள். மிக உன்னதமான தேனாகிய நீர் உலகம் முழுவதற்கும் தேவன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

சங்கீதம் 83:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தரும், ஏகமன நிர்ணயமாய் ஆலோசனை செய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா) மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். அவர்களையும், அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும். கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.