சங்கீதம் 80:1-19

சங்கீதம் 80:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, எங்களுக்குச் செவிகொடும். கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும். உமது வல்லமையை எழச்செய்து, எங்களை இரட்சிக்க வாரும். இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, உமது மக்கள் மன்றாடும்போது எவ்வளவு காலத்திற்கு கோபங்கொண்டிருப்பீர்? நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்; நீர் அவர்களை நிறைய கண்ணீரைப் பருகும்படிச் செய்தீர். நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்; எங்கள் பகைவர் எங்களை ஏளனம் செய்யவிட்டீர். சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; நாங்கள் இரட்சிக்கப்படும்படி உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்; பிற நாட்டு மக்களைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர். நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன. அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், தன் தளிர்களை நதி வரைக்கும் பரப்பியது. நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே. காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன. சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும், இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும், உமது வலதுகரம் நாட்டிய வேரையும், உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த உமது மகனையும் காத்துக்கொள்ளும். உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது; உமது முகத்தின் கண்டிப்பான பார்வையினால் உமது மக்கள் அழிகிறார்கள். உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல், உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த மானிடமகன்மேல் அமரச்செய்யும். அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், நாங்கள் உமது பெயரைச் சொல்லி வழிபடுவோம். சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; நாங்கள் இரட்சிக்கப்படும்படி உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும்.

சங்கீதம் 80:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும். எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களைக் காப்பாற்ற வந்தருளும். தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள். சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும், தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது. இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்; உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக. அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம். சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

சங்கீதம் 80:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் மேய்ப்பரே, என்னைக் கேளும். நீர் யோசேப்பின் ஆடுகளை (ஜனங்களை) வழி நடத்துகிறீர். கேருபீன்கள் மேல் ராஜாவாக நீர் வீற்றிருக்கிறீர். நாங்கள் உம்மைப் பார்க்கட்டும். இஸ்ரவேலின் மேய்ப்பரே, உமது பெருமையை எப்பிராயீமுக்கும் பென்யமீனுக்கும், மனாசேக்கும் காட்டும். வந்து எங்களைக் காப்பாற்றும். தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, எப்போது நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்பீர்? என்றென்றைக்கும் எங்களோடு கோபமாயிருப்பீரோ? உமது ஜனங்களுக்கு நீர் கண்ணீரையே உணவாகக் கொடுத்தீர். உமது ஜனங்களின் கண்ணீர் நிரம்பிய பாத்திரத்தையே உமது ஜனங்களுக்கு நீர் கொடுத்தீர். அதுவே அவர்கள் பருகும் தண்ணீராயிற்று. எங்கள் சுற்றத்தினர் சண்டையிடுவதற்கான பொருளாக எங்களை மாற்றினீர். எங்கள் பகைவர்கள் எங்களைப் பார்த்து நகைக்கிறார்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும். எங்களை ஏற்றருளும், எங்களைக் காப்பாற்றும். கடந்த காலத்தில் எங்களை முக்கியமான ஒரு தாவரத்தைப்போன்று நடத்தி வந்தீர். நீர் உமது “திராட்சைக்கொடியை” எகிப்திலிருந்து கொண்டுவந்தீர். இத்தேசத்திலிருந்து பிறர் விலகிப்போகுமாறு கட்டாயப்படுத்தினீர். உமது “திராட்சைக் கொடியை” நீர் இங்கு நட்டு வைத்தீர். “திராட்சைக்கொடிக்காக” நீர் நிலத்தைப் பண்படுத்தினீர். அதன் வேர்கள் வேரூன்றிச் செல்வதற்கு நீர் உதவினீர். உடனே அத் “திராட்சைக்கொடி” தேசமெங்கும் படர்ந்தது. அது பர்வதங்களை மூடிற்று. அதன் இலைகள் பெரும் கேதுரு மரங்களுக்கு நிழல் தந்தன. அதன் கொடிகள் மத்தியதரைக் கடல் வரைக்கும் படர்ந்தது. அதன் கிளைகள் ஐபிராத்து நதிவரைக்கும் சென்றது. தேவனே, உமது “திராட்சைக்கொடி” யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்? இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான். காட்டுப்பன்றிகள் வந்து உமது “திராட்சைக் கொடியின்” மீது நடந்து செல்கின்றன. காட்டு மிருகங்கள் வந்து அதன் இலைகளைத் தின்கின்றன. சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும். பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி” யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும். தேவனே, உமது கைகளால் நட்ட “திராட்சைக் கொடியைப்” பாரும். நீர் வளர்த்தெடுத்த இளமையான செடியை நீர் பாரும். உலர்ந்த சருகைப்போல் உமது “திராட்சைக் கொடி” நெருப்பில் எரிக்கப்பட்டது. நீர் அதனிடம் கோபங்கொண்டு, அதனை அழித்தீர். தேவனே, உமது வலது பக்கத்தில் நின்ற உமது குமாரனை நெருங்கும். நீர் வளர்த்தெடுத்த உமது மகனிடம் நெருங்கி வாரும். அவர் மீண்டும் உம்மை விட்டுச் செல்லமாட்டார். அவர் வாழட்டும், அவர் உமது நாமத்தைத் தொழுதுகொள்வார். சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, எங்களிடம் மீண்டும் வாரும். எங்களை ஏற்றுக்கொள்ளும், எங்களைக் காப்பாற்றும்.

சங்கீதம் 80:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும். எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும். தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம் பண்ணுகிறார்கள். சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. அதின் நிழலால் மலைகளும், அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? காட்டுப்பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும். உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும். அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள். உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன் மீதிலும் இருப்பதாக. அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம். சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்