சங்கீதம் 78:1-8

சங்கீதம் 78:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன். நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள். நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம். அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள். அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது.

சங்கீதம் 78:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள். என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

சங்கீதம் 78:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள். நான் உங்களுக்கு இந்தக் கதையைக் கூறுவேன். நான் உங்களுக்கு இப்பழங்கதையைக் கூறுவேன். நாங்கள் இக்கதையைக் கேட்டோம், அதை நன்றாக அறிந்தோம். எங்கள் தந்தையர் இக்கதையைக் கூறினார்கள். நாங்கள் இக்கதையை மறக்கவும்மாட்டோம். இறுதி தலைமுறை வரைக்கும் எங்கள் ஜனங்கள் இக்கதையைச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். நாம் அனைவரும் கர்த்தரைத் துதிப்போம். அவர் செய்த அற்புதமான காரியங்களைக் குறித்துச் சொல்வோம். கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார். புது குழந்தைகள் பிறப்பார்கள், அவர்கள் இனைஞராக வளருவார்கள். அவர்கள் அக்கதைகளைத் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். இவ்வகையில் கடைசி தலைமுறையினர் வரைக்கும் எல்லோரும் சட்டத்தை அறிந்திருப்பார்கள். எனவே அந்த ஜனங்கள் எல்லோரும் தேவனை நம்புவார்கள். தேவன் செய்தவற்றை அவர்கள் மறக்கமாட்டார்கள். அவர்கள் கவனமாக அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள். தங்கள் தேவனுடைய கட்டளைகளை ஜனங்கள் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்வார்களானால், அந்தக் குழந்தைகள் அவர்களின் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள். அவர்கள் முற்பிதாக்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிய மறுத்தார்கள். அந்த ஜனங்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அவர்கள் தேவ ஆவியானவருக்கு உண்மையாக இருக்கவில்லை.

சங்கீதம் 78:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்து கொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.