சங்கீதம் 76:1-12
சங்கீதம் 76:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. அவருடைய கூடாரம் சாலேமில் இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார். நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான். யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன. நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது. இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர். உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
சங்கீதம் 76:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர். தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது. யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது, வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும். பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
சங்கீதம் 76:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள். இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள். தேவனுடைய ஆலயம் சாலேமில் இருக்கிறது. தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது. அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள், மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார். தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர். அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள். ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன. அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார். இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர். தேவனே, நீர் பயங்கரமானவர்! நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை. கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார். தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார். பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார். பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது. தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள். நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும். தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள். ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள். இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள். எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள். அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள். தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார். பூமியின் எல்லா ராஜாக்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
சங்கீதம் 76:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா) மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர். தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா) மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.