சங்கீதம் 75:1-10
சங்கீதம் 75:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள். இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன். பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள். நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.
சங்கீதம் 75:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது. நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன். பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன். உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்; உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள். கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து ஊற்றுகிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன். துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
சங்கீதம் 75:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள். தேவன் கூறுகிறார்: “நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன். பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும். ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்.” “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’ ‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார். ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை எதுவும் இப்பூமியில் இல்லை. தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார். தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார். கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது. அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார், கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள். நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன். இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன். கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன். நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
சங்கீதம் 75:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா) வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன். உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.