சங்கீதம் 73:21-28

சங்கீதம் 73:21-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் இருதயம் கசந்தது, என் உள்ளம் குத்தப்பட்டது. நான் ஒன்றும் அறியாத மூடனானேன்; நான் உமக்கு முன்பாக விலங்கைப்போல நடந்துகொண்டேன். ஆனாலும், நான் எப்பொழுதும் உம்முடனே இருக்கிறேன்; நீர் என் வலதுகையை பிடித்துக்கொள்கிறீர். நீர் உமது ஆலோசனையினால் எனக்கு வழிகாட்டுகிறீர்; பின்பு நீர் என்னை உமது மகிமைக்குள் எடுத்துக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையன்றி எனக்கு யார் உண்டு? பூமியிலும் உம்மைத்தவிர எனக்கு வேறொரு விருப்பமில்லை. என் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயிற்று; ஆனால் இறைவனே என்றென்றைக்கும் நீரே என் இருதயத்தின் பெலனும் எனக்குரியவருமாய் இருக்கிறார். உம்மைவிட்டுத் தூரமாகிறவர்கள் அழிவார்கள்; உமக்கு உண்மையற்றவர்களை நீர் தண்டிப்பீர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இறைவனுக்கு அருகில் இருப்பதே எனக்கு நலம்; ஆண்டவராகிய யெகோவாவை நான் என் புகலிடமாக்கிக் கொண்டேன்; உமது செயல்களையெல்லாம் நான் விவரிப்பேன்.

சங்கீதம் 73:21-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியாக என்னுடைய மனம் கசந்தது, என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன். நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் என்னுடைய பங்குமாக இருக்கிறார். இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர். எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

சங்கீதம் 73:21-28 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் மூடனாக இருந்தேன். நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன். தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன். மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன். எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன. நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன். தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர். தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர். பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர். தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர். நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்? என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம், ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர். என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர். தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர். என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது. என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன். தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.

சங்கீதம் 73:21-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன். நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். ஆனாலும், நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப் போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர். எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.