சங்கீதம் 72:1-14
சங்கீதம் 72:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும். அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார். மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும். மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும். சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள். அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும். அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும். பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள். தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; ஷேபாவும், சேபாவின் அரசர்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும். எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும். ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும் உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார். பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி, எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார். அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்; ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும்.
சங்கீதம் 72:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். அவர் உம்முடைய மக்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும். மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள். தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
சங்கீதம் 72:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும். ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும். தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும். ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும். திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும். சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும். பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும். அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும். சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும். ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும், கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும். பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள். புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும். தர்ஷீசின் ராஜாக்களும் தூரத்துத் தேசங்களின் ராஜாக்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும். ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள ராஜாக்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும். எல்லா ராஜாக்களும் நமது ராஜாவை விழுந்து வணங்கட்டும். எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும். நமது ராஜா திக்கற்றோருக்கு உதவுகிறார். ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் ராஜா உதவுகிறார். ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் ராஜாவைச் சார்ந்திருப்பார்கள். ராஜா அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார். அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து ராஜா அவர்களைக் காப்பாற்றுகிறார். அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் ராஜாவுக்கு மிக முக்கியமானவை.
சங்கீதம் 72:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலை முறையாகப் பயந்திருப்பார்கள். புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள். தர்ஷீசின் ராஜாக்களும், தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். சகல ராஜாக்களும் அவரைப் பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.