சங்கீதம் 7:12-17

சங்கீதம் 7:12-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். தீமையினால் நிறைந்தவர்களோ பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, தாங்களே அதற்குள் விழுகிறார்கள். அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதம் 7:12-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதம் 7:12-17 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை. தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள். அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள். அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள். கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.

சங்கீதம் 7:12-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். அவன் தீவினை அவன் சிரசின் மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.