சங்கீதம் 7:1-17
சங்கீதம் 7:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்; என்னைத் துரத்துகின்ற அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவியும். இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து, என்னைத் தப்புவிக்க ஒருவருமின்றித் துண்டு துண்டாக்கிப் போடுவார்கள். என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து என் கைகள் குற்றமுடையதாய் இருந்தால், என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால், அல்லது காரணமின்றி என் பகைவனைக் கொள்ளையிட்டிருந்தால், அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்; அவன் என்னைத் தரையில் தள்ளி, உயிர்போக மிதித்து தூசியிலே என்னைக் கிடக்கப்பண்ணட்டும். யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்; என் எதிரிகளினுடைய கடுங்கோபத்திற்கு விரோதமாக எழுந்திடும். என் இறைவனே, விழித்தெழும்; நீதியைக் கட்டளையிடும். எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து நீர் உன்னதத்திலிருந்து அவர்களை ஆளுகை செய்யும். யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும். யெகோவாவே, என்னுடைய நீதிக்குத் தக்கதாய் என்னை நியாயந்தீரும்; மகா உன்னதமானவரே, என் உத்தமத்திற்கு ஏற்ப எனக்கு நியாயம் செய்யும். சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற நீதியுள்ள இறைவனே, கொடியவர்களின் வன்செயலை ஒரு முடிவுக்குக் கொண்டுவாரும்; நீதியுள்ளவர்களைப் பாதுகாப்பாய் இருக்கச் செய்யும். மகா உன்னதமான இறைவனே என் கேடயம்; இருதயத்தில் நேர்மையுள்ளவர்களை விடுவிக்கிறார். இறைவன் நீதியுள்ள நீதிபதி; அவர் நாள்தோறும் தமது கடுங்கோபத்தை வெளிப்படுத்தும் இறைவன். கொடியவன் மனம் மாறாவிட்டால், இறைவன் தமது வாளைக் கூராக்குவார்; அவர் தமது வில்லை வளைத்து நாணேற்றுவார். அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்; எரிகிற அம்புகளையும் ஆயத்தமாக்குகிறார். தீமையினால் நிறைந்தவர்களோ பிரச்சனையைக் கர்ப்பந்தரித்து, வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறார்கள். மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ, தாங்களே அதற்குள் விழுகிறார்கள். அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது; அவர்கள் வன்செயல் அவர்கள் தலைமீதே விழுகிறது. யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்; மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 7:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும். துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 7:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். என்னைத் துரத்தும் மனிதரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். என்னை மீட்டுக்கொள்ளும்! நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன். என்னைக் கவர்ந்து செல்கையில் யாரும் என்னைக் காப்பாற்ற இயலாது! எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை. நான் தவறிழைக்கவில்லையென்று உறுதியளிக்கிறேன்! என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை. என் நண்பர்களின் பகைவர்க்கு உதவவுமில்லை. ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான். அவன் என்னைக் கொல்ல ஆவலாயிருக்கிறான். அவன் என் ஜீவனைத் தரையில் வீழ்த்தி நசுக்க விரும்பி அழுக்குக்குள் என் ஆத்துமாவை அழுத்துகிறான். கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்! என் பகைவன் கோபங்கொண்டிருக்கிறான், எழுந்து அவனோடு போர் புரியம். கர்த்தாவே, எழுந்து நீதி செய்யும். கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும். உம்மைச் சுற்றிலும் தேசங்களை ஒன்று சேரும். கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும். எனது நேர்மையையும், நான் களங்கமற்றவன் என்பதையும் நிரூபியும். தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும். தேவனே, நீர் நல்லவர். நீர் ஜனங்களின் இருதயங்களைப் பார்க்க வல்லவர். நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்கு தேவன் உதவுகிறார். தேவன் என்னைப் பாதுகாப்பார். தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார். தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை. தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள். அவர்கள் இரகசியமாய் திட்டமிடுவார்கள், பொய்யுரைப்பார்கள். அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள். ஆனால் தங்கள் வலைகளில் தாங்களே சிக்கித் துன்புறுவார்கள். அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள். அவர்கள் பிறரிடம் கொடுமையாய் நடந்துகொண்டனர். ஆனால் அவர்களுக்குத் தகுதியானதைப் பெறுவார்கள். கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன். மகா உன்னதமான கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பேன்.
சங்கீதம் 7:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்து பிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா). கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். அவன் தீவினை அவன் சிரசின் மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.