சங்கீதம் 66:5-12
சங்கீதம் 66:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்; மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை. அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்; மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்; வாருங்கள், அவரில் களிகூருவோம். அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன; கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும். எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்; அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக. அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்; நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார். இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்; வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர். எங்களைச் சிறைபிடித்து, எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர். மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்; நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம், ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
சங்கீதம் 66:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர். கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்; அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம். அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா) மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள். அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார். தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
சங்கீதம் 66:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும். தேவன் கடலை வறண்ட நிலமாக்கினார். மகிழ்ச்சியுடைய அவரது ஜனங்கள் நதியைக் கடந்து போனார்கள். தேவன், அவரது மிகுந்த வல்லமையால் உலகத்தை ஆளுகிறார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை தேவன் கண்ணோக்குகிறார். ஒருவனும் அவரை எதிர்த்துப் போராட முடியாது. ஜனங்களே, நம் தேவனைத் துதியுங்கள், உரத்த குரலில் துதிப்பாடல்களை அவருக்குப் பாடுங்கள். தேவன் நமக்கு உயிரைத் தந்தார். தேவன் நம்மைக் காப்பாற்றுகிறார். ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார். தேவனே, நீர் எங்களைக் கண்ணியில் விழச் செய்தீர். கனமான பாரத்தை நீர் எங்கள் மேல் வைக்கிறீர். எங்கள் பகைவர்கள் எங்கள்மீது நடக்க நீர் அனுமதித்தீர். நெருப்பின் வழியாகவும் தண்ணீரின் வழியாகவும் நடக்குமாறு எங்களை வழி நடத்தினீர். ஆனால் ஒரு பத்திரமான இடத்திற்கு எங்களை அழைத்து வந்தீர்.
சங்கீதம் 66:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம். அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா) ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ் சத்தத்தைக் கேட்கப் பண்ணுங்கள். அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டீர்.