சங்கீதம் 65:1-13
சங்கீதம் 65:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும். மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள். நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர். உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம். எங்கள் இரட்சகராகிய இறைவனே, உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால் நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்; பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும் தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர். நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர். கடல்களின் இரைச்சலையும் அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி, மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர். பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள். விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும் நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர். நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்; மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி, இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன; இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர். நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர். வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது. பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன. புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன; அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.
சங்கீதம் 65:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர். உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். பூமியின் கடைசி எல்லைகளிலும் தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர். வல்லமையைக் கட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி, கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர். பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர். தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது. வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
சங்கீதம் 65:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
சீயோனின் தேவனே, நான் உம்மைத் துதிக்கிறேன். நான் வாக்குறுதி பண்ணினவற்றை உமக்குத் தருவேன். நீர் செய்த காரியங்களைக் குறித்து நாங்கள் கூறுவோம். நீர் எங்கள் ஜெபங்களைக் கேட்கிறீர். உம்மிடம் வருகிற ஒவ்வொருவரின் ஜெபத்தையும் நீர் கேட்கிறீர். எங்கள் பாவங்கள் மிகுந்த பாரமாயிருக்கையில் அப்பாவங்களை நீர் மன்னித்தருளும். தேவனே, நீர் உம் ஜனங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் உமது ஆலயத்தில் வந்து தொழுதுகொள்ளுமாறு நீர் எங்களைத் தேர்ந்தெடுத்தீர். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! உமது பரிசுத்த இடமாகிய உமது ஆயலயத்தில் எல்லா அதிசயக் காரியங்களையும் நாங்கள் பெற்றோம். தேவனே, நீர் எங்களைக் காப்பாற்றும். நல்லோர் உம்மிடம் ஜெபம் செய்வார்கள், நீர் அவர்கள் ஜெபத்திற்குப் பதிலளிப்பீர். அவர்களுக்குப் பல அதிசயமான காரியங்களைச் செய்வீர். உலகத்தின் பல பாகங்களில் வாழ்வோர் உம்மை நம்புவார்கள். தேவன் தமது வல்லமையால் மலைகளை உண்டாக்கினார். அவரது வல்லமையை நம்மை சுற்றிலும் நாம் காண்கிறோம். சீறும் கடலை தேவன் அமைதியாக்கினார். “சமுத்திரம்” போல ஜனங்களை தேவன் பூமியில் உண்டாக்கினார். நீர் செய்யும் அதிசயமான காரியங்களைக் கண்டு உலகமெங்கும் வாழும் ஜனங்கள் வியப்படைவார்கள். சூரிய உதயமும், சூரியன் மறைவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியூட்டும். நீர் நிலத்தைப் பாதுகாக்கிறீர். நீருற்றி, தாவரங்கள் வளர வகைசெய்கிறீர். தேவனே, நீர் நீருற்றுகளில் தண்ணீரை நிரப்பி, பயிர்களை வளரச்செய்கிறீர். இவ்வாறு நீர் இதனைச் செய்கிறீர்: உழுத நிலங்களில் மழை தண்ணீரை ஊற்றுகிறீர். வயல்களை தண்ணீரால் நனையப் பண்ணுகிறீர். நிலத்தை மழையால் மிருதுவாக்குகிறீர். இளம்பயிர்கள் வளர்ந்தோங்கச் செய்கிறீர். நல்ல அறுவடையால் புத்தாண்டை ஆரம்பிக்கிறீர். பயிர்களால் வண்டிகளில் பாரமேற்றுகிறீர். பாலைவனங்களும் மலைகளும் புற்களால் நிரம்பின. புல்வெளிகளில் ஆட்டு மந்தைகள் நிரம்பின. பள்ளத்தாக்குகளில் தானியங்கள் நிரம்பின. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.
சங்கீதம் 65:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமை கொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர். உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர். வல்லமையை இடைகட்டிக் கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர். கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர். தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.