சங்கீதம் 64:1-10
சங்கீதம் 64:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும். கொடியவர்களின் சதியிலிருந்தும், ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும். அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள். அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள். தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்; “நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள். அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, “நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள். நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை. ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள். இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள். எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து, அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள். நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்; இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!
சங்கீதம் 64:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்; எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும். அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள். அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள். அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள். எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள். நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
சங்கீதம் 64:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே நான் கூறுவதைக் கேளும். நான் என் பகைவர்களுக்கு அஞ்சுகிறேன். என் ஜீவனைப் பகைவரிடமிருந்து காத்தருளும். என் பகைவரின் இரகசிய திட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். அத்தீய ஜனங்களிடமிருந்து என்னை மறைத்து வையும். அவர்கள் என்னைக்குறித்து இழிவான பொய்கள் பலவற்றைக் கூறினார்கள். அவர்கள் நாவுகளோ கூரிய வாள்களைப் போன்றவை. அவர்களின் கசப்பான வார்த்தைகள் அம்புகளுக்கு ஒப்பானவை. அவர்கள் ஒளிந்திருந்து உடனடியாக எவ்வித பயமுமின்றித் தங்கள் அம்புகளை நேர்மையான, சாதாரண ஒரு மனிதனை நோக்கி எய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தீங்கு செய்வதற்கு தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் பொய்களைக் கூறி, கண்ணிகளை வைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி, “நாம் கண்ணி வைப்பதை யாரும் பார்க்கமாட்டார்கள்” என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பலியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜனங்கள் நினைப்பதை அறிவது கடினமானது. ஆனால் தேவனும் தமது “அம்புகளை” எய்யக்கூடும்! தீயோர் அதை அறிந்துகொள்ளும் முன்னமே காயமுற்றிருப்பார்கள். தீயோர் பிறருக்குத் தீயவற்றைச் செய்ய நினைப்பார்கள். ஆனால் தேவனால் அவர்கள் திட்டத்தை அழிக்க முடியும். அத்தீய காரியங்கள் அவர்களுக்கே நிகழுமாறு செய்ய இயலும். அவர்களைக் காணும் ஒவ்வொருவரும் ஆச்சரியத்தால் தங்கள் தலைகளை அசைப்பார்கள். தேவன் செய்ததை ஜனங்கள் அறிந்துகொள்வார்கள். அவரைக் குறித்து அந்த ஜனங்கள் பிறருக்குச் சொல்வார்கள். அப்போது ஒவ்வொருவரும் தேவனைக் குறித்து அதிகமாக அறிவார்கள். தேவனுக்கு அஞ்சி, அவரை மதிக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நல்லோர் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். அவர்கள் தேவனில் நம்பிக்கைக்கொள்வார்கள். நல்லோராகிய நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
சங்கீதம் 64:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்து கொள்வார்கள். நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.