சங்கீதம் 61:1-8

சங்கீதம் 61:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், என் மன்றாட்டுக்குச் செவிகொடும். பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்; என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும். நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர். நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன். இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை நீர் எனக்குத் தந்திருக்கிறீர். அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும். இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும் உண்மையையும் நியமித்தருளும். அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.

சங்கீதம் 61:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு, என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும். என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். நீர் எனக்கு அடைக்கலமும், எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர். நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதம் 61:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும். நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும். நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம். நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன். தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும். ராஜாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். அவர் என்றென்றும் வாழட்டும்! அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும். நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.

சங்கீதம் 61:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா) தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும், உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.