சங்கீதம் 6:1-10

சங்கீதம் 6:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்; யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும். என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு? யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும். இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்? நான் கலங்கியே இளைத்துப் போனேன். இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன். என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன. அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார். இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார். என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.

சங்கீதம் 6:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும். மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன். துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார். யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

சங்கீதம் 6:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும். கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன. என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்? கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும். கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்! கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன். எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன. தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார். எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.

சங்கீதம் 6:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? என் பெரு­மூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். துயரத்தினால் என் கண்கள் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப் போயிற்று. அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.