சங்கீதம் 55:1-8

சங்கீதம் 55:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும். எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன். எதிரியின் வார்த்தையினாலும் கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, கோபத்தில் என்னை பகைக்கிறார்கள். என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; மரணபயம் என்னைத் தாக்குகின்றன. பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; பயங்கரம் என்னை மூடிக்கொண்டது. நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! பறந்துபோய் இளைப்பாறுவேன். நான் தொலைவில் தப்பிப்போய் பாலைவனத்தில் தங்குவேன். கடும் காற்றுக்கும் புயலுக்கும் தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.

சங்கீதம் 55:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்; எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன். அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது; மரணபயம் என்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.

சங்கீதம் 55:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனே, என் ஜெபத்தைக் கேளும். இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும். தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும். என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன். என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான். கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள். என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள். என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது. நான் மரணபயம் அடைந்தேன். நான் அஞ்சி நடுங்கினேன். பயத்தால் தாக்குண்டேன். ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன். அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன். நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன். நான் ஓடி தப்பித்துக்கொள்வேன். துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.

சங்கீதம் 55:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. பயமும் நடுக்கமும், என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று. அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா) பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.