சங்கீதம் 53:1-6

சங்கீதம் 53:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான். அவர்கள் சீர்கெட்டவர்கள்; அவர்களுடைய வழிகள் இழிவானவை; அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை. இறைவன் பரலோகத்திலிருந்து மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார், அவர்களில் விவேகமுள்ளவனாவது இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார். எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை. தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ? மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்; அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை. பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே, அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள். உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்; இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக! இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

சங்கீதம் 53:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 53:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான். அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை. தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள். ஒவ்வொரு மனிதனும் தீயவன். நன்மையான காரியத்தைச் செய்பவன் ஒருவன் கூட இல்லை. தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்! ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை. தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார். ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள். அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள். அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார். எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள். அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார். சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக. தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார். அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான். இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.

சங்கீதம் 53:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுது கொள்ளுகிறதில்லை. உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.