சங்கீதம் 51:10-17
சங்கீதம் 51:10-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும். உமது சமுகத்தில் இருந்து என்னைத் தள்ளிவிட வேண்டாம், உமது பரிசுத்த ஆவியானவரை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். உமது இரட்சிப்பின் மகிழ்ச்சியைத் எனக்குத் திரும்பத்தாரும்; விரும்பி நடக்கும் ஆவியை தந்து என்னைத் தாங்கும். அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள். இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். எனது நாவு உமது நீதியைப் பாடும். யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். நீர் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் நான் அதைக் கொண்டுவருவேன்; தகன காணிக்கையிலும் நீர் மகிழ்வதில்லை. இறைவனுக்கு உகந்த பலி உடைந்த ஆவிதான்; இறைவனே, குற்றத்தை உணர்ந்து உடைந்த இதயத்தை நீர் புறக்கணிக்கமாட்டீர்.
சங்கீதம் 51:10-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும். ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
சங்கீதம் 51:10-17 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும். என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்! உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும். நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள். தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும். என் தேவனே, நீரே எனது மீட்பர். நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும். என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்! நீர் பலிகளை விரும்பவில்லை. நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை! தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
சங்கீதம் 51:10-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.