சங்கீதம் 49:5-20

சங்கீதம் 49:5-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தீங்கு நாட்கள் வரும்போதும், கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும் நான் ஏன் பயப்படவேண்டும்? அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து, தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள். ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது; அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது. ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது; எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது. அவர்கள் அழிவைக் காணாமல் என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது. ஞானிகள் சாவதையும், மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்; அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம். தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும். ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள். தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே. அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும். ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார். பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே; ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது. அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள். செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.

சங்கீதம் 49:5-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, அவனை மீட்டுக்கொள்ளவும், அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள். ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான். இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும். ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) ஒருவன் செல்வந்தனாகி, அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான். மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

சங்கீதம் 49:5-20 பரிசுத்த பைபிள் (TAERV)

தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்? பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே. மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது. நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது. ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது. என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும், கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது. பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள். பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள். கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும். அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது. எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள். மூடரான மனிதருக்கும், தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது. எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர். கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன். அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும். ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார். கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்! சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள். அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள். அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது. மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும். தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும். அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும். அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை. ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது. மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.

சங்கீதம் 49:5-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒரு போதும் முடியாது. ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா) ஆட்டு மந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி, அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா) ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.