சங்கீதம் 48:1-14
சங்கீதம் 48:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம். இறைவன் அதின் கோட்டைப் பட்டணங்களில் வீற்றிருந்து, அவர்தாமே அதின் கோட்டை எனக் காண்பிக்கிறார். அரசர்கள் படைதிரட்டி ஒருமித்து முன்னேறி வந்தபோது, சீயோன் மலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து தப்பி ஓடினார்கள். அங்கே நடுக்கம் அவர்களைப் பிடித்தது; பிரசவிக்கும் பெண்ணுக்கு உண்டாகுவதைப் போன்ற வேதனை அவர்களைப் பிடித்தது. யெகோவாவே, நீர் கிழக்குக் காற்றினால், தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறீர். நாம் கேள்விப்பட்டது போலவே, சேனைகளின் இறைவனுடைய பட்டணத்தில், நம்முடைய யெகோவாவின் பட்டணத்தில் நாம் கண்டும் இருக்கிறோம்: இறைவன் அந்தப் பட்டணத்திற்கு என்றென்றைக்கும் பாதுகாப்பு கொடுக்கிறார். இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம். இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது. சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள். அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள். ஏனெனில் இந்த இறைவனே என்றென்றும் நம்முடைய இறைவன்; மரணம் வரையும் அவரே நமக்கு வழிகாட்டியாய் இருப்பார்.
சங்கீதம் 48:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள். கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா) தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது. உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக, யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள். பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்; மரணம்வரை நம்மை நடத்துவார்.
சங்கீதம் 48:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மேன்மையானவர். தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர். தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது. அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும். சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை. அதுவே பேரரசரின் நகரமாகும். அந்நகரத்து அரண்மனைகளில் தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார். ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து, இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள். அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள். அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள். தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால் பெருங்கப்பல்களை உடைத்தீர். ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம். தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார். தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம். தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர், பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர். நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம். தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது. யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன. சீயோனைச் சுற்றி நட. நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார். அந்த உயர்ந்த சுவர்களைப் பார். சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார். வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம். இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன். அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
சங்கீதம் 48:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள். கீழ்க்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா) தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.