சங்கீதம் 4:1-8

சங்கீதம் 4:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீதியுள்ள என் இறைவனே, நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும். என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்; என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும். மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்? எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்? யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார். நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்; நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது, உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள். நீதியான பலிகளைச் செலுத்தி, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள். “எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும். தானியமும் புதுத் திராட்சை இரசமும் நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர். நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்; ஏனெனில் யெகோவாவே, நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.

சங்கீதம் 4:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும். மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா) பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார். நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா) நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள். எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர். சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

சங்கீதம் 4:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும். என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்! என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்! ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்? என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள். கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார். கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள். படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள். தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக் கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்! “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்? கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!” என்று பலர் கூறுகிறார்கள். கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்! தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன். நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன். ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.

சங்கீதம் 4:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா). பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக் கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா). நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள். எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.