சங்கீதம் 39:4-13

சங்கீதம் 39:4-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. “மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். “ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்; என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும். நான் மவுனமாயிருந்தேன்; நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன். உமது வாதையை என்னை விட்டகற்றும்; உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன். பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது, நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்; நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே. “யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்; என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம். என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே, நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும், குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன். நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே, நான் திரும்பவும் மகிழும்படியாய், உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”

சங்கீதம் 39:4-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை. என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம். நீரே இதைச் செய்தீர் என்று நான் என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன். என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்; நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா) யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.

சங்கீதம் 39:4-13 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்? எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும். என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும். கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர். என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல. ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது. ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை! நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது. நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை. நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம். ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம். எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை. நீரே என் நம்பிக்கை! கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும். ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும். நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை. கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர். தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும். நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன். கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர். நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர். பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர். எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது. கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும். என் கண்ணீரைப் பாரும். உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன். என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன். கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும், நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

சங்கீதம் 39:4-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான். இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன். என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப் போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன். அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிற போது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா) கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.