சங்கீதம் 39:1-7

சங்கீதம் 39:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் இருந்தேன். ஆனால் என் வேதனை அதிகரித்தது; என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்: “யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும், என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்; என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும். என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்; எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது; பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும் எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே. “மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்; அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும், அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான். “ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்? என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.

சங்கீதம் 39:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது; என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது; அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன். யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும், என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்; என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது; எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்; வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான். யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான். இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.

சங்கீதம் 39:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன். என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன். நான் பேச மறுத்தேன். நான் எதையும் கூறவில்லை. ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன். நான் மிகவும் கோபமடைந்தேன். அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன். கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்? எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும். என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும். கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர். என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல. ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது. ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை! நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது. நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை. நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம். ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம். எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை. நீரே என் நம்பிக்கை!

சங்கீதம் 39:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா) வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான். இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.