சங்கீதம் 35:1-28

சங்கீதம் 35:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும். கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும். என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.” எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக. யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக; யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக. காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும், அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக. அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும். “யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும். இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது, எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் நான் அவர்களுக்காக துக்கித்தேன்; என் தாய்க்காக அழுகிறது போல, துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன். ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள். அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள். யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும். அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன். காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும். அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.” யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும். விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும். என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும். “ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும். என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக. என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும். எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.

சங்கீதம் 35:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும். என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக. அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே, என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும். கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள். அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. நான் அவனை என்னுடைய நண்பனாகவும் சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல் துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன். ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள். ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. அவர்கள் சமாதானமாகப் பேசாமல், தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும். அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை என்று பேசாதபடிக்கும் செய்யும். எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படவேண்டும். என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும். என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

சங்கீதம் 35:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, என் யுத்தங்களையும் என் போர்களையும் நீரே நடத்தும். கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும். எழுந்திருந்து எனக்கு உதவும். ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும். கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும். சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும். அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள். அவர்களை வெட்கமடையச் செய்யும். காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும். கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும். நான் பிழையேதும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள். காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள். எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும். அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும். அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும். அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன். “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை. கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர். ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன். சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன். நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன். ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர். கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும். அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன். உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா? அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன். அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன். தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன். அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன். துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன். ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர். அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல. ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை. அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள். அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள். அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்? அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள். கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும். கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன். வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன். பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது. தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள். என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை. இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள். என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா! நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள். கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும். எனவே சும்மா இராதேயும். என்னை விட்டு விலகாதேயும். கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும். எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும். அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும். அந்த ஜனங்கள், “ஆஹா! எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும். கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!” என அவர்கள் கூறவிடாதேயும். என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன். எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும். எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள். அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன். அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்! அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள். எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன். ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.

சங்கீதம் 35:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும். என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும். என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப் போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும். கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்து கொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்து கொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள். ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும். அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள். என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.