சங்கீதம் 34:15-22

சங்கீதம் 34:15-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன; ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார். நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார். அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது. தீமை கொடியவர்களைக் கொல்லும்; நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள். யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.

சங்கீதம் 34:15-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

சங்கீதம் 34:15-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார். அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார். கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து அவர்களை முற்றிலும் அழிக்கிறார். கர்த்தரிடம் ஜெபியுங்கள். அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார். உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார். சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர். கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார். நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும் அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார். அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார். தீயோரைத் தொல்லைகள் கொல்லும். நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள். தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார். அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

சங்கீதம் 34:15-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன் மேலும் குற்றஞ்சுமராது.