சங்கீதம் 34:1-22

சங்கீதம் 34:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்; அவருக்குரிய துதி எப்பொழுதும் என் உதடுகளில் இருக்கும். நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்; ஒடுக்கப்பட்டோர் இதைக் கேட்டு மகிழட்டும். என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒன்றுகூடி அவருடைய பெயரைப் புகழ்ந்து உயர்த்துவோம். நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்; அவர் என்னுடைய எல்லாப் பயத்திலிருந்தும் என்னை விடுவித்தார். அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய முகங்கள் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து; அவனை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றினார். அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும் யெகோவாவின் தூதன் முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவரிடத்தில் தஞ்சமடைகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்; ஏனெனில் அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை. இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்; ஆனால் யெகோவாவைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடுவதில்லை. என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயந்து நடப்பதைக் குறித்து நான் உங்களுக்குப் போதிப்பேன். உங்களில் யாராவது வாழ்வை நேசித்து அநேக நல்ல நாட்களைக் காண விரும்பினால், நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி, உங்கள் உதடுகளைப் பொய்ப் பேசுவதிலிருந்து காத்துக்கொள்ளுங்கள். தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள். யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன; அவருடைய காதுகள் அவர்களுடைய கதறுதலைக் கவனமாய்க் கேட்கின்றன; ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை பூமியிலிருந்தே அகற்றிப்போடும்படி, யெகோவாவினுடைய முகம் அவர்களுக்கு விரோதமாய் இருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்; அவர் அவர்களுடைய எல்லாத் துன்பங்களிலுமிருந்தும் அவர்களை விடுவிக்கிறார். யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்; ஆவியில் நொந்து இருக்கிறவர்களை யெகோவா காப்பாற்றுகிறார். நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம், ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவனை விடுவிக்கிறார். அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்; அவற்றில் ஒன்றுகூட முறிக்கப்படாது. தீமை கொடியவர்களைக் கொல்லும்; நீதிமான்களின் பகைவர்கள் குற்றவாளிகளாவார்கள். யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்; அவரிடத்தில் தஞ்சம் அடைகிற யாரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படமாட்டான்.

சங்கீதம் 34:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்; அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும். யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்; ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. நான் யெகோவாவை தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு, அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார். யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார். யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான். யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்; யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி, நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்? உன் நாவை தீங்கிற்கும், உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது; அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும், யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

சங்கீதம் 34:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன். என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும். தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள். என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும். தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள். அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள். உதவிவேண்டி தேவனிடம் போனேன். அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார். உதவிக்காக தேவனை நாடுங்கள். அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள். இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான். கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார். என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார். கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான். கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான். கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள். கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான். கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும். கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை. வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள். ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள். பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள். கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன். தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும், மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது. அம்மனிதன் பொய் பேசக்கூடாது. தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும். நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு. அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய். நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார். அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார். கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து அவர்களை முற்றிலும் அழிக்கிறார். கர்த்தரிடம் ஜெபியுங்கள். அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார். உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார். சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர். கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார். நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும் அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார். அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார். தீயோரைத் தொல்லைகள் கொல்லும். நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள். தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார். அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.

சங்கீதம் 34:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக் கேட்டு மகிழுவார்கள். என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப்பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன் மேலும் குற்றஞ்சுமராது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்