சங்கீதம் 33:12-22

சங்கீதம் 33:12-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ அவர்கள் பாக்கியவான்கள். யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்; தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் அனைவரையும் கவனிக்கிறார். அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார். எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை. விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது. யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து, மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார். நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார். நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன. யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.

சங்கீதம் 33:12-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

சங்கீதம் 33:12-22 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தேவன் தனது சொந்த ஜனங்களாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து, எல்லா ஜனங்களையும் கண்டார். அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் மனிதர்களையெல்லாம் பார்த்தார். ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார். ஒவ்வொருவனின் எண்ணத்தையும் தேவன் அறிகிறார். ராஜா தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை. ஒரு வீரன் தனது மிகுந்த பெலத்தால் காப்பாற்றப்படுவதில்லை. போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை. அவற்றின் ஆற்றல் நம்மை தப்புவிக்க வகை செய்வதேயில்லை. கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார். எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம். அவரே நமக்கு உதவியும் கேடகமுமாயிருக்கிறார். தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார். அவரது பரிசுத்த நாமத்தை நான் உண்மையாக நம்புகிறேன். கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்! உமது பேரன்பை எங்களுக்குக் காண்பியும்.

சங்கீதம் 33:12-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப் பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.