சங்கீதம் 26:1-12

சங்கீதம் 26:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், நான் தடுமாறுவதில்லை. யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்; ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன். ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை; தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன். யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி, உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன். யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன். பாவிகளோடு என் ஆத்துமாவையும், இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும். அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும். என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.

சங்கீதம் 26:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன். ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன். யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன். என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும். அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது. நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.

சங்கீதம் 26:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, என்னை நியாயந்தீரும். நான் தூய வாழ்க்கை வாழ்ந்ததை நிரூபியும். கர்த்தரை நம்புவதை என்றும் நான் நிறுத்தியதில்லை. கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும். என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும். நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன். உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன். நான் பொய்யரோடும் மோசடிக்காரரோடும் ஒருபோதும் சேர்ந்ததில்லை. அவ்வகையான பயனற்ற ஜனங்களோடு ஒருபோதும் சேர்ந்ததில்லை. அத்தீய கூட்டத்தாரை நான் வெறுக்கிறேன். தீங்கு செய்யும் அக்கூட்டத்தாரோடு நான் சேரமாட்டேன். கர்த்தாவே, நான் தூய்மையானவன் என்று காண்பிக்க என் கைகளைக் கழுவிக்கொண்டு உமது பலிபீடத்திற்கு வருகிறேன். கர்த்தாவே, உம்மைத் துதித்துப் பாடல்களைப் பாடுகிறேன். நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் பாடுகிறேன். கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன். மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன். கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும். அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும். அந்த ஜனங்கள் பிறரை ஏமாற்றக் கூடும். தீமை செய்வதற்கு அவர்கள் பணம் பெறக்கூடும். ஆனால் நான் களங்கமற்றவன். எனவே, தேவனே, என்னிடம் தயவாயிருந்து என்னை மீட்டுக்கொள்ளும். நேர்மையான வழியில் நான் தொடர்கிறேன். கர்த்தாவே, உம்மைப் பின்பற்றுவோர் சந்திக்கையில் நான் உம்மைத் துதிக்கிறேன்.

சங்கீதம் 26:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. கர்த்தாவே, என்னைப் பட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது. நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.