சங்கீதம் 25:16-22
சங்கீதம் 25:16-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள். என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன். தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
சங்கீதம் 25:16-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்; நான் தனிமையிலும் துன்பத்திலும் இருக்கிறேன். என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும். என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்; அவர்கள் எவ்வளவு கொடூரமாக என்னை வெறுக்கிறார்கள். என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்; உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கும் என்னை வெட்கப்பட விடாதேயும். உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்; ஏனெனில் என் எதிர்பார்ப்பு உம்மிலே இருக்கிறது. இறைவனே, இஸ்ரயேலை அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.
சங்கீதம் 25:16-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன். என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும். என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள். என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன். உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன். தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
சங்கீதம் 25:16-22 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும். என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும். என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும். கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும். நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும். என் பகைவர்களையெல்லாம் பாரும். அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள். தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும். தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும். தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.