சங்கீதம் 25:1-7

சங்கீதம் 25:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடிச் செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

சங்கீதம் 25:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்; என்னை வெட்கப்பட விடாதேயும்; என் பகைவர் என்மேல் வெற்றிகொள்ள விடாதேயும். உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும், ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள்; ஆனால் காரணமின்றி துரோகம் செய்பவர்கள் வெட்கமடைவார்கள். யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்; உமது பாதைகளை எனக்குப் போதியும். உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும். நீரே என் இரட்சகராகிய இறைவன், நாள்முழுதும் நான் உம்மையே எதிர்பார்க்கிறேன். யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும், ஏனெனில் அவை பூர்வகாலமுதல் இருக்கிறதே. என் வாலிப காலத்தின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினைக்கவேண்டாம்; உமது உடன்படிக்கையின் அன்பின்படி என்னை நினைத்துக்கொள்ளும், யெகோவாவே, நீர் நல்லவர்.

சங்கீதம் 25:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும். உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது. என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.

சங்கீதம் 25:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன். என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன். என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை. ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான். ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும். உமது வழிகளை எனக்குப் போதியும். எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும். நீரே என் தேவன், என் மீட்பர். அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன். கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும். எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும். எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும். கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.