சங்கீதம் 22:1-31

சங்கீதம் 22:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத் தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக் கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டா மிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது ; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

சங்கீதம் 22:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமல், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை. ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் நீர் பரிசுத்தர். உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர். அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை. ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள் “அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், யெகோவா அவனை இரட்சிக்கட்டும். அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள். ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர். நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர். நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, உதவிசெய்ய ஒருவருமில்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன. தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள். என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று. என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள். என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள். அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள். ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். என்னை வாளுக்குத் தப்புவியும்; என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும். சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும். அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன். யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள். ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார். நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன். ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக. பூமியின் கடைசிகளெல்லாம் யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும். ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார். பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள். பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும். அவர்கள் அவருடைய நீதியை, இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.

சங்கீதம் 22:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், பதில் கொடுக்கவில்லை; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள். நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து: யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர். என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, உதவி செய்ய யாரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூசியிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும். என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும். உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார். மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன். ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும். பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். பூமியின் செல்வந்தர் அனைவரும் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

சங்கீதம் 22:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)

என் தேவனே, என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர்! உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்! என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன். நீர் எனக்குப் பதில் தரவில்லை. இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன். தேவனே, நீர் பரிசுத்தர். நீர் ராஜாவைப்போல் அமர்கிறீர். கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது. எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள். ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள். நீர் அவர்களை மீட்டீர். தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர். அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர். அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை. நான் மனிதனன்றி, புழுவா? ஜனங்கள் என்னைக் கண்டு வெட்கினார்கள். ஜனங்கள் என்னைப் பழித்தனர். என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர். அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர். அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள். அவர் உன்னை மீட்கக்கூடும். உன்னை அவர் மிகவும் நேசித்தால், அவர் உன்னை நிச்சயம் காப்பாற்றுவார்!” என்றார்கள். தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை. நான் பிறந்த நாளிலிருந்தே என்னைக் காப்பாற்றி வருகிறீர். என் தாயிடம் பால் பருகும் காலத்திலிருந்தே நீர் உறுதியான நம்பிக்கையை தந்து எனக்கு ஆறுதல் அளித்தீர். நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன். என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன். எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்! தொல்லை அருகே உள்ளது, எனக்கு உதவுவார் எவருமில்லை. ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர். கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல் அவர்கள் வாய்கள் திறந்திருக்கின்றன. நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது. உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று. என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது. “மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர். “நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள். என் எலும்புகளை நான் காண்கிறேன். ஜனங்கள் என்னை முறைத்தனர்! அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்! அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள். கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்! கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும். அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும். சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும். காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும். கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன். பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன். கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே! அவரைத் தொழுதுகொள்ளுங்கள். இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள். தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை. கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன. உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன். ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள். கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள். உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக! தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் கர்த்தரே ராஜா. அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார். பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள். எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம். வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள். என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள். பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள். தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.

சங்கீதம் 22:1-31

சங்கீதம் 22:1-31 TAOVBSI