சங்கீதம் 19:1-10

சங்கீதம் 19:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன, ஆகாயங்கள் அவருடைய கரங்களின் செயலைப் பிரசித்தப்படுத்துகின்றன. அவைகள் நாள்தோறும் பேசுகின்றன; இரவுதோறும் அறிவை வெளிப்படுத்துகின்றன. அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன; அங்கே அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது; அவைகளின் வார்த்தைகள் உலகத்தின் கடைமுனை வரைக்கும் செல்கின்றன. யெகோவா வானங்களில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை அமைத்திருக்கிறார். சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும், பந்தயத்திற்காக ஓட மகிழ்ச்சியுடனிருக்கும் விளையாட்டு வீரனைப்போலவும் இருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையில் உதித்து, மறுமுனைவரை சுற்றிவருகிறது. அதின் வெப்பத்திற்குத் ஒன்றும் தப்புவதில்லை. யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது, அது ஆத்துமாவுக்குப் புத்துயிரளிக்கிறது. யெகோவாவினுடைய நியமங்கள் நம்பகமானவை, அவை பேதையை ஞானியாக்குகின்றன. யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை, அவை இருதயத்திற்கு மகிழ்வைக் கொடுக்கின்றன. யெகோவாவினுடைய கட்டளைகள் பிரகாசமானவை, அவை கண்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றன. யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது, அது என்றென்றும் நிலைத்திருக்கிறது. யெகோவாவினுடைய விதிமுறைகள் நிலையானவை, அவை முற்றிலும் நீதியானவை. அவை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட மிகுந்த விலையுயர்ந்தவை. அவை தேனைப் பார்க்கிலும், கூட்டிலிருந்து வடியும் தெளித்தேனைப் பார்க்கிலும் இனிமையானவை.

சங்கீதம் 19:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார். அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது. யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன. அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.

சங்கீதம் 19:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன. தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன. ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும். ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும், மேலும் உணர்த்தும். உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது. நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை. ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது. அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன. ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும். படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும். பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும். ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும். அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே. கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை. அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும். கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது. அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும். கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை. அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும். கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை. வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும். கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை. கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை. தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.

சங்கீதம் 19:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் சொல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

சங்கீதம் 19:1-10

சங்கீதம் 19:1-10 TAOVBSIசங்கீதம் 19:1-10 TAOVBSIசங்கீதம் 19:1-10 TAOVBSI